நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 275 ரன்னில் ஆல்-அவுட் - ரோரி பர்ன்ஸ் சதம் அடித்தார்


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 275 ரன்னில் ஆல்-அவுட் - ரோரி பர்ன்ஸ் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 5 Jun 2021 9:15 PM GMT (Updated: 5 Jun 2021 9:15 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 275 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

லண்டன்,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டிவான் கான்வே (200) இரட்டை சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் (59 ரன்), கேப்டன் ஜோ ரூட் (42 ரன்) களத்தில் இருந்தனர். மழையால் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடியது. முதல் பந்திலேயே கேப்டன் ஜோ ரூட் (42 ரன்) ஜாமிசனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ராஸ் டெய்லரிடம் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து டிம் சவுதி தனது ஸ்விங் தாக்குதலில் நிலை குலைய வைத்தார். அவரது அடுத்தடுத்த ஓவர்களில் ஆலி போப் (22 ரன்), டேன் லாரன்ஸ் (0), புதுமுக விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி (0) வரிசையாக வெளியேற்றப்பட்டனர்.அப்போது இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 140 ரன்களுடன் தடுமாறியது. இந்த நெருக்கடியான சூழலில் 7-வது விக்கெட்டுக்கு ரோரி பர்ன்சும், ஆலி ராபின்சனும் ஜோடி சேர்ந்து அணியை வீழ்ச்சியில் இருந்து ஓரளவு மீட்டனர். அணியின் ஸ்கோர் 203 ஆக உயர்ந்த போது ராபின்சன் (42 ரன்) ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மார்க்வுட் ரன் ஏதுமின்றியும், துணை கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் 10 ரன்னிலும் வெளியேறினர்.

9-வது விக்கெட் சரிந்த போது பர்ன்சின் சதத்திற்கு 9 ரன் தேவைப்பட்டது. இதன் பின்னர் ஆண்டர்சனின் ஒத்துழைப்போடு தனது 3-வது சதத்தை நிறைவு செய்த ரோரி பர்ன்ஸ் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இறுதி விக்கெட்டாக ரோரி பர்ன்ஸ் 132 ரன்களில் (297 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101.1 ஓவர்களில் 275 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஆண்டர்சன் 8 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஜாமிசன் 3 விக்கெட்டும், வாக்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 25 ஓவர்கள் முடிந்திருந்தபோது அந்த அணி 2 விக்கெட்டுக்கு 58 ரன் எடுத்திருந்தது.

Next Story