டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவரும் விளையாட வேண்டும்: கவாஸ்கர்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவரும் விளையாட வேண்டும்: கவாஸ்கர்
x
தினத்தந்தி 17 Jun 2021 12:48 AM GMT (Updated: 17 Jun 2021 12:48 AM GMT)

சவுத்தம்டனில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சவுத்தம்டனில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்துகிறது. எனவே நிச்சயம் ஆடுகளம் வறண்டு போய் இருக்கும். ஆட்டம் போக போக சுழற்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும். எனவே இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா இருவரும் விளையாட வேண்டும். அது மட்டுமின்றி அஸ்வின், ஜடேஜா ஆடுவதன் மூலம் பின்வரிசை பேட்டிங்குக்கும், சரியான பந்துவீச்சு கலவைக்கும் வலு சேர்க்கும். அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வானிலை மற்றும் ஆடுகளத்தன்மையை பொறுத்து ஆடும் லெவன் அணியை முடிவு செய்து கொள்ளலாம். வழக்கமாக வெளிநாட்டு பயணத்தின் போது ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒன்று அல்லது 2 பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு முறையான பயிற்சி ஆட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியினர் தங்களுக்குள் இரு அணியாக பிரித்து பயிற்சி ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்கள். அதுவே நல்ல பயிற்சி தான். இந்திய அணி இளமையும், அனுபவமும் கலந்த சிறந்த அணியாக இருக்கிறது. பெரும்பாலான இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் சில தடவை விளையாடி இருப்பதால் அவர்களுக்கு இங்குள்ள சீதோஷ்ண நிலை பற்றி நன்கு தெரியும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

கடந்த சில நாட்களாக சவுத்தம்டனில் ெவயில் அடித்தாலும், இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story