வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி பதிலடி


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி பதிலடி
x
தினத்தந்தி 28 Jun 2021 11:09 PM GMT (Updated: 28 Jun 2021 11:09 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்தது.

கிரனடா,

வெஸ்ட்இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் உள்ள கிரனடாவில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ‘பேட்’ செய்த தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா 46 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹென்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ஒபிட் மெக்காய் 3 விக்கெட்டும், கெவின் சின்கிளைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்களே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே பிளட்செர் 35 ரன்னும், பாபியன் ஆலென் 34 ரன்னும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் காஜிசோ ரபடா 3 விக்கெட்டும், ஜார்ஜ் லின்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

Next Story