கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவை 81 ரன்னில் சுருட்டி தொடரை வென்றது இலங்கை


கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவை 81 ரன்னில் சுருட்டி தொடரை வென்றது இலங்கை
x
தினத்தந்தி 29 July 2021 8:03 PM GMT (Updated: 2021-07-30T01:33:38+05:30)

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியை 81 ரன்னில் சுருட்டி வெற்றி கண்ட இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியது.

கொழும்பு, 

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.

இந்திய அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குருணல் பாண்ட்யா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, யுஸ்வேந்திர சாஹல் உள்பட 8 முன்னணி வீரர்கள் இந்த ஆட்டத்திலும் ஒதுக்கப்பட்டனர். மேலும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட்டில் பீல்டிங்கின் போது வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடது தோள்பட்டையில் காயமடைந்ததால் அவரையும் சேர்க்க இயலவில்லை. இதனால் இந்திய ஆடும் லெவன் அணிக்கு ஒரு வீரர் பற்றாக்குறை ஏற்பட்டது. வேறுவழியின்றி வலை பயிற்சிக்கு அழைக்கப்பட்டு இருந்த வீரர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சார் சந்தீப் வாரியர் அறிமுக வீரராக இடம் பிடித்தார். தற்போது தமிழக அணிக்காக விளையாடும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் தவான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய போதிய அனுபவம் இல்லாத இந்திய வீரர்கள், மந்தமான இந்த ஆடுகளத்தில் இலங்கையின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். முதல் ஓவரிலேயே கேப்டன் ஷிகர் தவான் (0) வீழ்ந்தார்.

அதன் பிறகு தேவ்தத் படிக்கல் (9 ரன்), சஞ்சு சாம்சன் (0), ருதுராஜ் கெய்க்வாட் (14 ரன்), நிதிஷ் ராணா (6 ரன்) வரிசையாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து இந்திய அணி ஊசலாடியது.

இதைத் தொடர்ந்து புவனேஷ்வர்குமாரும் (16 ரன்), குல்தீப் யாதவும் (23 ரன், நாட்-அவுட்) இரட்டை இலக்க பங்களிப்பு அளித்து சற்று ஆறுதல் அளித்தனர். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 81 ரன்னில் முடங்கியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 ஓவர்களில் வெறும் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹசரங்காவுக்கு நேற்று 24-வது பிறந்த நாளாகும்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் இலங்கையும் வெற்றி பெற்றிருந்தது.

இந்தியாவுக்கு எதிரான 20ஓவர் தொடரை இலங்கை வென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story