கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த் 28 வயதில் ஓய்வு


கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த் 28 வயதில் ஓய்வு
x
தினத்தந்தி 14 Aug 2021 12:58 AM GMT (Updated: 14 Aug 2021 12:58 AM GMT)

டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த் கடந்த 2012-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பை (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட்டில் இந்தியா மகுடம் சூடியதில் முக்கிய பங்கு வகித்தார்.

அந்த உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட உன்முக் சந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 111 ரன்கள் விளாசி 226 ரன் இலக்கை விரட்டிப்பிடிக்க உதவினார். இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று அப்போது முன்னாள் வீரர்கள் பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் இந்திய சீனியர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகளுக்காக விளையாடியும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

இந்த நிலையில் 28 வயதான உன்முக் சந்த் எல்லா வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். உலகின் மற்ற இடங்களில் சிறந்த வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் லீக்கில் விளையாட திட்டமிட்டுள்ளார். தங்களிடம் பதிவு செய்துள்ள கிரிக்கெட் வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிப்பதில்லை. அதில் விளையாட வேண்டும் என்றால் ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டியது அவசியம். அதனால் தான் அவர் இந்தியாவில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுள்ளார். உன்முக் சந்த் 67 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 8 சதம், 16 அரைசதம் உள்பட 3,379 ரன்கள் சேர்த்துள்ளார்.

Next Story