அமீரகத்தில் 19-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி


அமீரகத்தில் 19-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 15 Sep 2021 11:49 PM GMT (Updated: 15 Sep 2021 11:49 PM GMT)

அமீரகத்தில் விரைவில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

துபாய், 

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி முதல் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்ததால் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மே 3-ந்தேதி எதிர்பாராவிதமாக 4 அணிகளைச் சேர்ந்த சிலர் கொரோனாவில் சிக்கியதால் அத்துடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி நிறுத்தப்பட்டது. 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

இதைத் தொடர்ந்து எஞ்சிய 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதன்படி ஐ.பி.எல். போட்டி மீண்டும் வருகிற 19-ந்தேதி துபாயில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடக்கிறது. 19-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடத்தப்பட்டது. அப்போது கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக காணப்பட்டதால் ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட ஸ்டேடியத்தில் அனைத்து ஆட்டங்களும் வெற்றிகரமாக அரங்கேறின. ஆனால் இப்போது அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்து விட்டது. அத்துடன் அங்கு பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு விட்டனர். இதனால் ரசிகர்களை நேரில் பார்க்க விடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் ரசிகர்களை அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை தெரிவித்துள்ள ஐ.பி.எல். நிர்வாகம், ‘கொரோனா பிரச்சினையால் சிறிய இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தர இருப்பது மூலம் இந்த போட்டி முக்கியமான ஒன்றாக இருக்கும். கொரோனா பாதுகாப்பு நடைமுறை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசின் வழிகாட்டுதலை மனதில் கொண்டு போட்டி நடக்கும் 3 இடங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்களே அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கூறியுள்ளது.

ஆனால் எத்தனை சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு மைதானத்தின் மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளமான ஐபிஎல்டி20.காம் அல்லது பிளாட்டினம்லிஸ்ட்.நெட் ஆகிய இணையதளங்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். 2019-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு முதல்முறையாக ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளனர். ஐ.பி.எல். முடிந்த அடுத்த 2 நாட்களில் அங்கேயே 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்த ரசிகர்கள் அனுமதிப்பு அதற்கு ஒத்திகையாக அமையும்.

Next Story