பாகிஸ்தான் அணியின் சீருடையால் புதிய சர்ச்சை


பாகிஸ்தான் அணியின் சீருடையால் புதிய சர்ச்சை
x
தினத்தந்தி 10 Oct 2021 12:35 AM GMT (Updated: 10 Oct 2021 12:35 AM GMT)

பாகிஸ்தான் தங்களது அணிக்கான சீருடையில் இந்தியாவின் பெயரை தவிர்ப்பதற்காக, ‘ ஐ.சி.சி. ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி யூ.ஏ.இ.2021’ என்று பொறித்துள்ளது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் இந்த போட்டி இந்தியாவில் இருந்து ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யூ.ஏ.இ.) மாற்றப்பட்டது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பை போட்டி வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அமீரகத்தில் உலக கோப்பை போட்டி நடந்தாலும் அதற்குரிய அதிகாரபூர்வ உரிமம் இந்தியாவிடமே இருக்கிறது. அதனால் இது ‘ஐ.சி.சி. ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியா 2021’ என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

ஆனால் பாகிஸ்தான் வீம்புக்கு தங்களது அணிக்கான சீருடையில் இந்தியாவின் பெயரை தவிர்ப்பதற்காக, ‘ ஐ.சி.சி. ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி யூ.ஏ.இ.2021’ என்று பொறித்துள்ளது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சீருடையில் இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் இன்னும் அதிகாரபூர்வமாக தங்களது சீருடையை அறிமுகப்படுத்தவில்லை. எனவே இதே சீருடையுடன் ஆடுமா? அல்லது மாற்றம் செய்யுமா? என்பது சில தினங்களில் தெரிந்து விடும். மற்ற அணிகளின் சீருடையில் இந்தியாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.


Next Story