கிரிக்கெட்

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல் + "||" + Which other team will advance to the final? Delhi-Kolkata clash in 2nd qualifying round today

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி-கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன.
சார்ஜா,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை விரட்டியடித்தது.


இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் இன்றிரவு சார்ஜாவில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டெல்லி அணி எப்படி?

லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் பிடித்த டெல்லி அணி சென்னைக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் 172 ரன்கள் சேர்த்த போதிலும், கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. திடீரென விசுவரூபம் எடுத்த சென்னை கேப்டன் டோனி கடைசி ஓவரில் 3 பவுண்டரி விளாசி டெல்லிக்கு பதிலடி கொடுத்தார்.

ஆனாலும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்திற்குள் வந்ததால் இறுதி சுற்றை எட்டுவதற்கு டெல்லி அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது பாதிப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் பிரித்வி ஷாவும், கேப்டன் ரிஷாப் பண்டும் அரைசதம் அடித்தனர். ஆனால் இன்றைய ஆட்டம் மந்தமான (ஸ்லோ) ஆடுகளமான சார்ஜாவில் நடக்கிறது. அதனால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது முக்கியம். இங்கு 150 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும்.

தடுமாறும் அஸ்வின்

ஆரஞ்சு நிற தொப்பியை வெல்லும் வாய்ப்பில் ஓடும் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தில் 76 ரன்கள் எடுத்தால் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுலை (626 ரன்) பின்னுக்கு தள்ள முடியும். பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, அவேஷ்கான், அக்‌ஷர் பட்டேல் உள்ளிட்டோர் வலுசேர்க்கிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (12 ஆட்டத்தில் 5 விக்கெட்) பெரிய அளவில் ஜொலிக்காதது டெல்லிக்கு சற்று பின்னடைவு தான்.

இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத டெல்லி அணி கடந்த ஆண்டை போல் மறுபடியும் இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.

கொல்கத்தாவின் எழுச்சி

முதற்கட்ட சீசனில் சோடை போன கொல்கத்தா அணி, இந்த அமீரக சீசனில் எழுச்சி பெற்றதுடன் இறுதிப்போட்டி வாய்ப்பையும் நெருங்கி விட்டது. பேட்டிங்கில் சுப்மான் கில், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா ஆகியோரில் ஒன்றிரண்டு வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் கணிசமாக ரன்கள் சேர்த்து கொல்கத்தாவுக்கு கைகொடுக்கிறார்கள். கேப்டன் இயான் மோர்கன் (15 ஆட்டத்தில் 129 ரன்) தவிர மற்றவர்கள் நல்ல பார்மில் உள்ளனர்.

கொல்கத்தாவின் பிரதான பலமே சுழற்பந்து வீச்சு தான். வெளியேற்றுதல் சுற்றில் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 விக்கெட்டுகளை சாய்த்து, பெங்களூரு பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார். ரன்வேகத்தை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகளான நரினும் (14 விக்கெட்), வருண் சக்ரவர்த்தியும் (16 விக்கெட்) கொல்கத்தாவின் சுழல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார்கள். இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பந்து வீச்சு அச்சுறுத்தலாக அமையலாம். ஏற்கனவே 2 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியிருக்கும் கொல்கத்தா அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை உருவாக்க வரிந்துகட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் சந்தித்த லீக் ஆட்டங்களில் ஒன்றில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது. 2-வது ‘பேட்’ செய்த அணிகளே பெரும்பாலும் வெற்றிகள் பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். சார்ஜா மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் 6-ல் இரண்டாவது ‘பேட்’ செய்த அணிகளே வெற்றி வாகை சூடியிருப்பது கவனிக்கத்தக்கது.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

டெல்லி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட் (கேப்டன்), ஹெட்மயர், அக்‌ஷர் பட்டேல், டாம் கர்ரன் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்வின், அவேஷ்கான், ரபடா, அன்ரிச் நோர்டியா.

கொல்கத்தா: சுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, சுனில் நரின், தினேஷ் கார்த்திக், மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல்-ஹசன், லோக்கி பெர்குசன், ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. 20-ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
2. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
3. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
4. டி20 உலகக்கோப்பை: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமன் அபார வெற்றி
உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஓமன் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
5. சென்னை அணிக்காக முதல் வீரராக டோனி தக்கவைப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக டோனி முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.