டி-20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது நமீபியா


டி-20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது நமீபியா
x
தினத்தந்தி 22 Oct 2021 1:38 PM GMT (Updated: 22 Oct 2021 1:38 PM GMT)

அயர்லாந்து அணிக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜா,

ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சார்ஜாவில் இன்று நடைபெறும் 11-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் நமீபியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றுக்கு இதுவரை 3 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், 4-வதாக தகுதி பெறவுள்ள அணி எது என்பதை இன்றைய ஆட்டம் தீர்மானிக்கும். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி, பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பால் ஸ்டிர்லிங் 38 ரன்களிலும், கெவின் ஓபிரையன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 21 ரன்களில் எல்.பி.டபில்யூ. ஆனார். அடுத்து வந்த அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். 

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் எராஸ்மஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் டேவிட் வெய்ஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இதனையடுத்து 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து நமீபியா அணி 126 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு நமீபியா அணி முன்னேறியுள்ளது.

Next Story