20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி : அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது -இன்சமாம் உல் ஹக்


20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி : அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது -இன்சமாம் உல் ஹக்
x
தினத்தந்தி 26 Nov 2021 1:59 PM GMT (Updated: 26 Nov 2021 1:59 PM GMT)

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அழுத்தம்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளியது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்



இஸ்லாமாபாத்

20  ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடனான போட்டி தொடங்கும் முன்பே இந்திய அணி வீர்ரகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால், அவர்கள் பயந்துவிட்டார்கள் என  பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கிண்டலடித்துள்ளார்.

50 ஓவர்கள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஐக்கியஅரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை வென்றது. 

இந்த நிலையில்  இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டாஸ் போடுவதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் வரும்போதிருந்தே, போட்டியை நடத்துவோர் நெருக்கடியில் இருப்பது தெரிந்தது.

என்னைப் பொருத்தவரை இந்தியர்கள் போட்டி தொடங்கும் முன்பிருந்தே பதற்றத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள். அவர்களின் உடல்மொழி, குறிப்பாக விராட் கோலியின் உடல்மொழியை டாஸ் போடும் பார்த்தால் அவர் பதற்றத்தில் இருந்தது தெரிந்தது.

ஆனால், இந்திய வீரர்களின் உடல்மொழியோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தனர். ரோகித் சர்மா ஆட்டமிழந்தபின்புகூட இந்திய அணி பதற்றத்தில் இல்லை எனக் கூறமுடியாது. ரோகித் சர்மாவே நெருக்கடியில்தான் பேட்டிங் செய்தார். போட்டி தொடங்கும் முன்பிருந்தே இந்திய வீரர்கள் நெருக்கடியில் பதற்றத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதைப் போன்று இதற்கு முன் மோசமாக இந்திய அணி விளையாடியதே இல்லை. இந்திய அணி சிறந்த அணி, அதில் சந்தேகமில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக இந்திய வீரர்களின் செயல்பாட்டைப் பார்த்தால், அவர்கள் தான் உலகக் கோப்பை வெல்லத் தகுதியானவர்கள் எனத் தோன்றும். ஆனால், பாகிஸ்தானுடனான போட்டி இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்த்தைக் கொடுத்து, பயத்தைக் கொண்டு சேர்த்தது.

பாகிஸ்தானுடன் இந்திய அணி தோல்வி அடைந்தது, சமூக வலைத்தளத்தில் பெரும் விமர்சனங்கள் வந்தன. ஒருவாரம் வரை இடைவெளி எடுத்துக்கொண்டு வந்தபோதிலும் நியூசிலாந்தின் சான்ட்னர், சோதி பந்துவீச்சைக் கூட சமாளிக்க முடியவில்லை. இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்கள், ஆனால், அழுத்ததம்தான் அவர்களை தோல்வியில் தள்ளியது இவ்வாறு இன்சமாம் தெரிவித்தார்.

Next Story