இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வார்னருக்கு ஓய்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Jan 2022 9:09 PM GMT (Updated: 25 Jan 2022 9:09 PM GMT)

பிக்பாஷ் கிரிக்கெட்டில் அசத்திய மெக்டெர்மோட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிட்னி, 

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிட்னியில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்கிறது. 

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் அணிக்கு திரும்புகிறார். நடப்பு பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் 2 சதம், 3 அரைசதம் உள்பட 577 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்துள்ள பென் மெக்டெர்மோட் மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளார். வார்னர் இல்லாததால் அவர் தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அடுத்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு அணியை தயார்படுத்தி வருவதால் இலங்கை தொடருக்கு உதவி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்லிஸ், பென் மெக்டெர்மோட், மேக்ஸ்வெல், ஜய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா.


Next Story