இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதே இலக்கு: தினேஷ் கார்த்திக் பேட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Feb 2022 12:52 AM GMT (Updated: 8 Feb 2022 12:52 AM GMT)

இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பது தனது இலக்காகும்’ என்று பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 36 வயது தினேஷ் கார்த்திக் 2019-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் கடைசியாக ஆடினார். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில் தினேஷ் கார்த்திக் தனது ஆலோசகர் அபிஷேக் நாயர் மேற்பார்வையில் மும்பையில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். அவர் போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இன்னும் வலுவாகவே இருக்கிறது. 20 ஓவர் போட்டி எனது தொடக்க புள்ளியாக இருக்கும். ஐ.பி.எல். போன்ற ஒரு போட்டியில் நீங்கள் உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுகையில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக என்னால் முயற்சி செய்து தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 20 ஓவர் போட்டியில் எனது திறமையை அதிகரித்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதே எனது இலக்காகும்.

குறுகிய வடிவிலான போட்டி அணிக்கு தேர்வாக வயது ஒரு அளவு கோல் அல்ல. சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணிக்கு திரும்பிய ஷிகர் தவான் என்னுடைய வயதை ஒட்டியவர் தான். அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தார். குறுகிய வடிவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட அனுபவம் மற்றும் உடல் தகுதி தான் முக்கியமானதாகும். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 40 வயதை நெருங்கிய சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்ததை பார்த்தோம்.

எந்த அணிக்காக ஆட விருப்பம்?

ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் எனது செயல்பாடுகளை ஆராய்ந்து எதில் ஏற்றம் காண வேண்டியது அவசியம் என்பதனை அறிந்து செயல்பட்டு வருகிறேன். களத்தில் இறங்கியதும் முதல் 5 பந்துகளில் எந்த மாதிரி ரன் எடுக்கும் வாய்ப்பை உருவாக்குவது என்பதில் இப்போது கவனம் செலுத்துகிறேன்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று கேட்கிறீர்கள். இந்த கேள்விக்கு பதில் அளிப்பது மிகவும் கடினமானதாகும். நான் விளையாடும் அணிக்காக மட்டுமின்றி எனக்காகவும் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். சென்னையை சேர்ந்த நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடிந்தால் சிறப்பாக தான் இருக்கும். முடிவில் எந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கவுரவமாகவே கருதுவேன். என்னை பொறுத்த மட்டில் தொடர்ந்து விளையாடுவது முக்கியமானதாகும். குறைந்தபட்சம் அடுத்த 3-4 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறேன்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.


Next Story