புஜாரா, ரஹானே நீக்கப்பட்டது எதிர்பார்த்த முடிவு தான்..! சுனில் கவாஸ்கர்


புஜாரா, ரஹானே நீக்கப்பட்டது எதிர்பார்த்த முடிவு தான்..! சுனில் கவாஸ்கர்
x
தினத்தந்தி 20 Feb 2022 8:04 PM GMT (Updated: 20 Feb 2022 8:04 PM GMT)

இலங்கை டெஸ்டில் புஜாரா, ரஹானேவை நீக்க பிசிசிஐ எடுத்த முடிவு எதிர்பார்த்ததுதான் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருவரும் சோபிக்காததால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்ததது. 

இந்திய அணியிலும் அவர்கள் இருவருக்குமான வாய்ப்பு கேள்விக்குறி என கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்பார்த்ததுபோலவே, இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ரஹானே கடந்த 15 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதங்கள் மட்டுமே விளாசியுள்ளார். அவரின் சாராசரி 20.25. அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்திருந்தார். 

இதனால், இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டிருக்கும் அவர், மும்பை அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் 290 பந்துகளை எதிர்கொண்ட அவர் 129 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்து கிட்டத்தட்ட 417 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக சதம் விளாசியுள்ளார்

அவரைப் போலவே சிறப்பான ஆட்டத்தை புஜாராவும் வெளிப்படுத்தியுள்ளார் . சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் புஜாரா, மும்பை அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார். ஆனால், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய அவர், 83 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புஜாரா, ரஹானே நீக்கப்பட்டது எதிர்பார்த்த முடிவு தான். ஏனெனில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் ஒரு சதமோ அல்லது 80-90 ரன்களோ கூட எடுக்கவில்லை. இப்போது ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடும் அவர்கள் அதில் நிறைய ரன்கள் குவிக்கும் போது, நிச்சயம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியும்’ என்று கூறினார்.

Next Story