ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணி 8-வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணி 8-வது வெற்றி
x
தினத்தந்தி 30 April 2022 10:12 PM GMT (Updated: 30 April 2022 10:12 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் அணி 8-வது வெற்றியை ருசித்தது.

கோலி அரைசதம்

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரபுதேசாய் நீக்கப்பட்டு மஹிபால் லோம்ரோர் சேர்க்கப்பட்டார். குஜராத் அணியில் யாஷ் தயாள், அபினவ் மனோகருக்கு பதிலாக பிரதீப் சங்வான், சாய் சுதர்சன் இடம் பெற்றனர். ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி அவரும், விராட் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். வேகப்பந்து வீச்சாளர் சங்வானின் பந்து வீச்சில் பிளிஸ்சிஸ் (0), விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ரஜத் படிதார் இணைந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் மிடில் ஓவர்களில் ஸ்கோர் கொஞ்சம் மந்தமாகவே நகர்ந்தது. முதல் 8 ஓவர்களில் 51 ரன்களே எடுத்திருந்தனர். இருப்பினும் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவனமுடன் ஆடிய கோலி நடப்பு தொடரில் தனது முதலாவது அரைசதத்தை 45 பந்துகளில் அடித்தார். படிதாரும் அரைசதத்தை கடந்தார்.

ஸ்கோர் 110 ரன்களை (14.1 ஓவர்) எட்டிய போது படிதார் 52 ரன்களில் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். கோலி 58 ரன்களில் (53 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷமியின் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். இதன் பிறகு மேக்ஸ்வெல் (33 ரன், 18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சிறிது நேரம் வேடிக்கை காட்டினார். ஆனால் தினேஷ் கார்த்திக் (2 ரன்) ரஷித்கானின் சுழலில் சிக்கி சோடை போனார். இறுதியில் லோம்ரோர் 8 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து 170 ரன்களை தொட வைத்தார்.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தது. குஜராத் தரப்பில் பிரதீப் சங்வான் 2 விக்கெட்டும், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், ரஷித்கான், லோக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

குஜராத் வெற்றி

அடுத்து களம் இறங்கிய குஜராத் அணியில் விருத்திமான் சஹாவும் (29 ரன்), சுப்மான் கில்லும் (31 ரன்) முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து அருைமயான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னிலும், தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 20 ரன்னிலும் வெளியேற குஜராத்துக்கு சிக்கல் உண்டானது. அப்போது அந்த அணி 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை (12.5 ஓவர்) பறிகொடுத்து தவித்தது. இந்த சூழலில் 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லரும், ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியாவும் கைகோர்த்து பெங்களூரு அணியின் மகிழ்ச்சியை சீர்குலைத்தனர். ஹேசில்வுட்டின் ஒரே ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட 17 ரன்கள் திரட்டி ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக திருப்பினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்ட போது, இருவரும் தலா ஒரு பவுண்டரி ஓடவிட்டு அசத்தினர்.

குஜராத் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் அந்த அணி இலக்கை எட்டிப் பிடிப்பது இது 5-வது நிகழ்வாகும். ராகுல் திவேதியா 43 ரன்களுடனும் (25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மில்லர் 39 ரன்களுடனும் (24 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ராகுல் திவேதியா ஆட்டநாயகன் விருதை பெற்றார். குஜராத் அணியில் ஆட்டநாயகன் விருது பெறும் 7-வது வீரர் திவேதியா ஆவார்.

பிளிஸ்சிஸ் கருத்து

9-வது லீக்கில் விளையாடிய குஜராத்துக்கு இது 8-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி பிளே-ஆப் வாய்ப்பை நெருங்கியுள்ளது. பெங்களூருவுக்கு இது 5-வது தோல்வியாகும். பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘நாங்கள் 175-180 ரன்கள் வரை எடுக்க முயற்சித்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் அவர்கள் அபாரமாக பந்து வீசி கொஞ்சம் கட்டுப்படுத்தி விட்டனர். கோலி எடுத்த அரைசதம் அவர் சரியான திசையில் பயணிப்பதற்கான படிக்கட்டாகும்’ என்றார்.


Next Story