பஞ்சாப் அணியிடம் பணிந்தது டெல்லி: பேட்ஸ்மேன்கள் மீது கேப்டன் வார்னர் பாய்ச்சல்


பஞ்சாப் அணியிடம் பணிந்தது டெல்லி: பேட்ஸ்மேன்கள் மீது கேப்டன் வார்னர் பாய்ச்சல்
x

David Warner (image courtesy: Delhi Capitals via ANI)

மிடில் ஓவர்களில் 3-4 விக்கெட்டுகளை வேகமாக இழந்தால் இதுபோன்ற போட்டிகளில் சாதிக்க முடியாது என்று டெல்லி அணி கேப்டன் வார்னர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 136 ரன்களே எடுத்து 8-வது தோல்வியை சந்தித்ததுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்த டெல்லி அணி அடுத்த 8 ஓவர்களில் 37 ரன்கள் மட்டும் சேர்த்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பாதகமாக அமைந்தது. பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவிக்கையில், 'பஞ்சாப் அணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த நாங்கள் முயற்சித்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர்கள் கூடுதல் ரன் சேர்த்தனர். பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக பேட்டிங் செய்தார். மேலும் நாங்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டது பாதகமாக அமைந்தது. நாங்கள் பேட்டிங்கின் போது 'பவர்பிளே'யில் நன்றாக செயல்பட்டு சிறப்பான தொடக்கம் கண்டோம். ஆனால் அதன் பிறகு 30 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தால் எப்படி வெற்றி பெற முடியும்.

களத்தில் பெருமையோடும், உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்தும் சுதந்திரமாக விளையாட வேண்டும். நல்ல தொடக்கம் கண்ட நிலையில் பேட்டிங்கில் மீண்டும் ஒருமுறை நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். இந்த ஆட்டத்தில் நாங்கள் சரியான கலவையில் அணியை தேர்வு செய்ததாக நம்புகிறேன். மிடில் ஓவர்களில் 3-4 விக்கெட்டுகளை வேகமாக இழந்தால் இதுபோன்ற போட்டிகளில் நீங்கள் சாதிக்க முடியாது' என்றார்.


Next Story