மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி - திலக் வர்மா, அர்ஜூனுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு


மும்பை அணி ஹாட்ரிக் வெற்றி - திலக் வர்மா, அர்ஜூனுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
x

இளம் வீரர்கள் திலக் வர்மா, அர்ஜூன் தெண்டுல்கர் ஆகியோரை ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.

ஐதராபாத்,


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீன் 64 ரன்களும், திலக் வர்மா 37 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்னில் அடங்கி 3-வது தோல்வியை சந்தித்தது. அரைசதம் அடித்ததுடன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றிய மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

'ஐதராபாத் மைதானத்தில் எனக்கு மறக்க முடியாத நிறைய நினைவுகள் உண்டு. இங்கு நான் 3 ஆண்டுகள் (டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக) விளையாடினேன். கோப்பையும் வென்று இருக்கிறேன். இங்கு எப்போது வந்து ஆடினாலும் மனதிற்கு பிடித்தமானதாக இருக்கும். அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களை நிலைநிறுத்தி கொள்ள வேண்டியது எங்களுக்கு முக்கியமானதாகும். இதே போல் ஐ.பி.எல். அனுபவம் இல்லாத வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்புஅளிப்பதுடன் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

எங்களிடம் வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. அவர்கள் நெருக்கடியின்றி சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். திலக் வர்மாவின் பேட்டிங் அனுகுமுறை என்னை கவர்ந்துள்ளது. அவர் அச்சமின்றி ஆடுகிறார். பந்து வீச்சாளர் யார் என்பதை பார்க்காமல் பந்து வீச்சு எப்படி இருக்கிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ப விளையாடுகிறார். எதிர்காலத்தில் அவர் நிறைய அணிகளுக்காக விளையாடுவதை நாம் பார்க்கலாம்' என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல்முறையாக விக்கெட் வீழ்த்திய தெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் பந்து வீச்சையும் ரோகித் வெகுவாக பாராட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், 'அர்ஜூன் எங்கள் அணியில் 3 ஆண்டுகளாக அங்கம் வகித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரது ஆட்டத்திறன் மேம்பட்டு வருகிறது. அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறார். அத்துடன் அவர் நல்ல நம்பிக்கையுடன் தனது திட்டத்தில் தெளிவாக இருக்கிறார். புதிய பந்தில் 'ஸ்விங்' செய்ய முயற்சிக்கும் அவர் கடைசி கட்ட ஓவரில் யார்க்கராகவும் சிறப்பாக பந்து வீசினார்' என்று குறிப்பிட்டார்.


Next Story