நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - ஜோ ரூட் அபார சதம்


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - ஜோ ரூட் அபார சதம்
x

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

லண்டன்,

இங்கிலாந்து - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. 9 ரன் பின்தங்கிய நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 77 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் மேற்கொண்டு 61 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-வது நாளான நேற்று ஜோ ரூட்டும், பென் போக்சும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவியதால் அவசரப்படாமல் சில ஓவர்கள் எச்சரிக்கையுடன் ஆடினர். அதன் பிறகு ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

ஜோ ரூட் சதம்

அபாரமாக ஆடிய ஜோ ரூட் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்தை தொட்ட போது, டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தினார். 4-வது இன்னிங்சில் (இலக்கை சேசிங் செய்யும் இன்னிங்ஸ்) அவர் அடித்த முதல் சதமாகவும் இது அமைந்தது. தொடர்ந்து அவர் டிம் சவுதியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி விளாசி இலக்கை எட்ட வைத்தார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 279 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் 115 ரன்களுடனும் (170 பந்து, 12 பவுண்டரி), பென் போக்ஸ் 32 ரன்களுடனும் (92 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட போட்டி என்பதால் வெற்றியின் மூலம் இங்கிலாந்துக்கு 12 புள்ளிகள் கிடைத்தது.

3 போட்டி கொண்ட இந்த தொடரில் தற்போது இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் வருகிற 10-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.


Next Story