20 ஓவர் உலகக்கோப்பையில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார் - கவாஸ்கர் பாராட்டு


20 ஓவர் உலகக்கோப்பையில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்  - கவாஸ்கர் பாராட்டு
x

Image Courtesy : BCCI / IPL 

அஸ்வின் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியுள்ளார்.

மும்பை,

நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக கலக்கி வருபவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவின் சுழற்பந்துவீச்சு நாயகனாக மிளிரும் இவர் இந்த ஐபிஎல் சீசனில் 3, 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கி பேட்டிங்-கிலும் அசத்தி வருகிறார்.

குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 23 பந்தில் 43 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சாதித்து வரும் அஸ்வின் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியுள்ளார்.

அஸ்வின் குறித்து அவர் கூறுகையில், " அஸ்வின் ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். எந்த வரிசையிலும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்பதை அஸ்வின் நிரூபித்து உள்ளார். எந்த வரிசையில் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்.

மேலும் அவர் ஐந்து டெஸ்ட் சதங்களைப் அடித்துள்ளார். அதனால் அவர் பேட்டிங் செய்ய முடியும், அது அவருக்குத் தெரியும். அந்த பேட்டிங்கை "அல்ட்ரா ஷார்ட் ஃபார்மேட்டில்" செய்து, ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என்று அஸ்வின் நிரூபித்துள்ளார். அதுவே அவரது குறிக்கோள், அதனால்தான் அவர் தனது சொந்த பேட்டிங் செயல்திறனைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறார். " என கவாஸ்கர் தெரிவித்தார்


Next Story