எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டேன் என்பது பெருமையாக உள்ளது - மேக்ஸ்வெல்


எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டேன் என்பது பெருமையாக உள்ளது - மேக்ஸ்வெல்
x

Image Courtesy: AFP

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் (201 ரன்) இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 291 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் இப்ராகிம் ஜட்ரான் சதம் (129 ரன்) அடித்து அசத்தினார்.

இதையடுத்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் இரட்டை சதம் (201 ரன்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் வெற்றிக்கு பின்னர் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த மைதானத்தில் பீல்டிங் செய்யும்போது வெப்பம் அதிகமாக இருந்தது. இது போன்ற வெப்பமான இடத்தில் நான் அதிகமாக பயிற்சி மேற்கொண்டது கிடையாது. இருந்தாலும் நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

அதாவது எந்த இலக்கையும் சேசிங் செய்வதற்கு என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்துக்கொண்டு பாசிட்டிவாக விளையாடினேன். ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாகவே பந்து வீசினார்கள். ஆனாலும் என்னுடைய இந்த ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது.

என்னுடைய வாய்ப்பை நான் நன்றாக பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டதில் பெருமை அடைகிறேன். முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் தோற்றதும் எங்களை பற்றி நிறைய எழுதினார்கள். ஆனால் ஒரு அணியாக தற்போது நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story