இந்திய ரசிகர்களிடம் இருந்து அதை நான் எதிர்பார்க்கவில்லை - பாகிஸ்தான் கேப்டன் நெகிழ்ச்சி


இந்திய ரசிகர்களிடம் இருந்து அதை நான் எதிர்பார்க்கவில்லை - பாகிஸ்தான் கேப்டன் நெகிழ்ச்சி
x

இந்திய மக்கள் நிறைய அன்பை கொடுத்து தங்களுடைய கிரிக்கெட்டை பாராட்டினார்கள் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

ஐ.சி.சி. 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்றபோது இந்திய ரசிகர்கள் தங்களுக்கு மிகப்பெரிய அன்பையும் ஆதரவையும் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விராட் கோலியுடன் பேசும் போதெல்லாம் தன்னுடைய முக்கியமான கேள்விகளுக்கு விலைமதிப்பற்ற ஆலோசனைகளை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதை வெளியே சொல்ல முடியாது என்று தெரிவிக்கும் பாபர் அசாம் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"நாங்கள் ஒவ்வொரு முறையும் எதிராக விளையாடும்போது எப்போதும் விராட் கோலியுடன் நான் பேச முயற்சிப்பேன். அப்போதெல்லாம் அவரிடம் நான் சில கேள்விகளை கேட்பேன். அதற்கு அவர் பதில் கொடுத்து எனக்கு உதவி செய்துள்ளார். அவருடன் மட்டுமின்றி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் விளையாடும்போது ஸ்டீவ் சுமித், கேன் வில்லியம்சன் ஆகியோருடன் நான் பேசுவேன்.

விராட் கோலியுடன் நான் நல்ல முறையாக பேசினேன். நாங்கள் பேசிய சில அம்சங்களை பற்றி என்னால் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால் அது மிகவும் இனிப்பானது. இந்தியாவில் விளையாடியது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. அங்கே மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். இந்தியாவில் விளையாடும்போது நீங்கள் அதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

அதே சமயம் அங்கு எங்களுக்கும் நல்ல ஆதரவு கிடைத்தது. இந்திய ரசிகர்களிடம் இருந்து அதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. அதுவே இந்தியாவில் என்னுடைய முதல் பயணமாகும். அது வித்தியாசமான அனுபவமாகும். அது அவர்களின் அன்பாகும். இந்திய மக்கள் எங்களுக்கு நிறைய அன்பை கொடுத்து எங்களுடைய கிரிக்கெட்டை பாராட்டினார்கள்" என்று கூறினார்



Next Story