இஷான் கிஷானின் அதிவேக இரட்டைசதம்..! விராட் கோலி அசத்தல் சதம் - இந்திய அணி 409 ரன்கள் குவிப்பு


இஷான் கிஷானின் அதிவேக இரட்டைசதம்..! விராட் கோலி அசத்தல் சதம் - இந்திய அணி 409 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2022 10:06 AM GMT (Updated: 10 Dec 2022 11:22 AM GMT)

410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி 'திரில்' வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடிவருகிறார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார் . அதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்துவருகிறது. தொடர்ந்து அதிரடியை தொடர்ந்த இஷான் கிஷான்126 பந்துகளில் இரட்டைசதமடித்து அசத்தினார்.

இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் சச்சின் , சேவாக் ,ரோகித் சர்மாவுக்கு பிறகு இரட்டைசதமடித்து இஷான் கிஷான் சாதனை படைத்துள்ளார்.தொடர்ந்து ஆடிய அவர் 24 பவுண்டரி , 10 சிக்ஸர்களுடன்131 பந்துகளில் 210 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஷ்ரேயாஸ் அய்யர் ,கே.எல்.ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் நிலைத்து ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 91 பந்துகளில் 113 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் அதிரடி காட்டிய வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் ,அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்தது

தொடர்ந்து 410 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.


Next Story