டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்காக முடிவு கிடைக்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது - டிராவிட் சொல்கிறார்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்காக முடிவு கிடைக்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது - டிராவிட் சொல்கிறார்
x

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்காக முடிவு கிடைக்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது என்று இந்திய பயிற்சியாளர் டிராவிட் சொல்கிறார்.

ஆமதாபாத்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டிலும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டதும், 3 நாட்களிலேயே போட்டியில் முடிவு கிடைத்ததும் விமர்சனங்களை கிளப்பின. இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று போட்டி நடுவர் கிறிஸ் பிராட் முத்திரை குத்தியதுடன் 3 தகுதி இழப்பு புள்ளியும் விதித்தார். இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

3-வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளத்தை ஐ.சி.சி. போட்டி நடுவர் மோசமானது என்று மதிப்பிட்டு இருப்பது குறித்து கேட்கிறீர்கள். அந்த விவகாரத்திற்குள் நான் அதிகமாக செல்லமாட்டேன். போட்டி நடுவருக்கு தனது கருத்தை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அவரது கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல.

ஆனால் சில நேரங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக்காக இது போன்ற முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளங்களில் விளையாட வேண்டி உள்ளது. பெரும்பாலான நாடுகள் இதைத்தான் விரும்புகின்றன. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆடுவது சவாலாக உள்ளதை பார்க்க முடிகிறது. நாங்களும் வெளிநாட்டில் ஆடிய போது சில சவால்மிக்க ஆடுகளங்களில் விளையாடி இருக்கிறோம்.

உதாரணமாக, 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்காவில் விளையாடிய போது, அந்த தொடரில் சுழற்பந்துவீச்சின் தாக்கம் துளி கூட இல்லை. இத்தகைய ஆடுகளங்களில் விளையாடும் போது அதன் தரம் மற்றும் எப்படி விளையாடினால் சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அணியில் ஒரு வீரர் சிறப்பாக ஆடினாலும் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும்.

அதற்கு நாக்பூர் டெஸ்டில் ரோகித் சர்மாவின் (120 ரன்) செயல்பாடே சாட்சி. அது மட்டுமின்றி இது போன்ற கடினமான ஆடுகளங்களில் இரட்டை சதத்தையோ, சதத்தையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் 50-60 அல்லது 70 ரன்கள் எடுத்தாலே இத்தகைய சூழலில் அது சிறந்த ஸ்கோராக இருக்கலாம்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.


Next Story