ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணி 'சாம்பியன்..'ஆட்டநாயகன் விருதை பெற்ற ஜெய்தேவ் உனட்கட்


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணி சாம்பியன்..ஆட்டநாயகன் விருதை பெற்ற ஜெய்தேவ் உனட்கட்
x

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சவுராஷ்டிரா அணி, கவுரவமிக்க ரஞ்சி கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும்.

கொல்கத்தா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் பெங்கால் 174 ரன்களும், சவுராஷ்டிரா 404 ரன்களும் எடுத்தன. 230 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக கேப்டன் மனோஜ் திவாரி 68 ரன்கள் எடுத்தார். சவுராஷ்டிரா கேப்டனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான ஜெய்தேவ் உனட்கட் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 12 ரன் இலக்கை சவுராஷ்டிரா அணி 2.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றதுடன், சாம்பியன் கோப்பையையும் சொந்தமாக்கியது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சவுராஷ்டிரா அணி, கவுரவமிக்க ரஞ்சி கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2019-20 சீசனிலும் மகுடம் சூடியிருந்தது.

இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றிய ஜெய்தேவ் உனட்கட் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் மொத்தம் 3 சதம், 3 அரைசதம் உள்பட 907 ரன்கள் (10 ஆட்டம்) குவித்த சவுராஷ்டிரா பேட்ஸ்மேன் அர்பித் வசவதா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.


Next Story