காயத்தில் இருந்து மீண்டு வரும் ரிஷப் பண்ட் உலகக் கோப்பை போட்டியை தவறவிடுகிறார்


காயத்தில் இருந்து மீண்டு வரும் ரிஷப் பண்ட் உலகக் கோப்பை போட்டியை தவறவிடுகிறார்
x

கோப்புப்படம்

ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல்தகுதியை எட்ட 7-8 மாதங்கள் பிடிக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான 25 வயது ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நடந்த கார்விபத்தில் படுகாயம் அடைந்தார். முழங்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவுக்கு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துள்ள அவர் காயத்தில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார்.

தற்போது அவர் ஊன்று கோலின் உதவியுடன் நடக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினார். அத்துடன் லண்டனில் ஜூன் 7-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவரால் பங்கேற்க இயலாது. இதற்கிடையே காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை எட்டுவதற்கான பயிற்சிகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரிஷப் பண்ட் தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் ரிஷப் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல்தகுதியை எட்ட 7-8 மாதங்கள் பிடிக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் ஊன்று கோல் உதவி இல்லாமல் நடக்கவே இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது. அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் களம் திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றை ரிஷப் பண்ட் தவறவிடுகிறார். இது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.


Next Story