2-வது டி20 போட்டி : தென் ஆப்பிரிக்க அணிக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி


2-வது டி20 போட்டி : தென் ஆப்பிரிக்க அணிக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி
x

Image Courtesy : Twitter BCCI 

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

கட்டாக்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில் கிஷன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணி சரிவை நோக்கி சென்றது. கேப்டன் பண்ட் 5 ரன்களிலும், பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.


Next Story