சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி


சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி
x

கோப்புப்படம்

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

ஜெய்ப்பூர்,

15-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மொகாலி, இந்தூர், லக்னோ, ராஜ்கோட் உள்பட பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

ஜெய்ப்பூரில் நடந்த 'பி' பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில் டெல்லி-மணிப்பூர் அணிகள் சந்தித்தன. 'டாஸ்' ஜெயித்த மணிப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹிடென் தலால் 47 ரன்கள் (27 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) திரட்டினார்.

பின்னர் ஆடிய மணிப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி இந்த ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஹிடென் தலாலுக்கு பதிலாக தாக்கம் ஏற்படுத்தும் (இம்பேக்ட்) மாற்று வீரராக களம் இறங்கிய சுழற்பந்து வீச்சாளர் ஹிர்திக் ஷோகீன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

மற்ற லீக் ஆட்டங்களில் மும்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிசோரமையும், கேரளா 10 விக்கெட் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேசத்தையும் தோற்கடித்தன.


Next Story