டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: நெல்லை-திண்டுக்கல், மதுரை-கோவை அணிகள் மோதல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: நெல்லை-திண்டுக்கல், மதுரை-கோவை அணிகள் மோதல்
x

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் நெல்லை -திண்டுக்கல், மதுரை -கோவை அணிகள் மோதுகின்றன.

திண்டுக்கல்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். நெல்லையில் முதல் 6 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், எஞ்சிய ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 2 நாள் இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரு ஆட்டங்கள் நடக்கின்றன.

பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை சந்திக்கிறது. நெல்லை அணி தனது தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் தோற்கடித்தது. அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் தயாராகி வருகிறது.

திண்டுக்கல் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை வீழ்த்தியது. வெற்றியை தொடரும் வேட்கையுடன் உள்ள திண்டுக்கல் அணிக்கு உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் ஆடுவது கூடுதல் அனுகூலமாகும்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மதுரை அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை சாய்த்தது. கோவை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் பணிந்து இருந்தது.

இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story