டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிசுற்றில் நுழைந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிசுற்றில் நுழைந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி
x
தினத்தந்தி 27 July 2022 6:06 PM GMT (Updated: 27 July 2022 6:10 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

சேலம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார். ஷாஜகான் 25 ரன்களும், சஞ்சய் 21 ரன்களும், கேப்டன் பாபா இந்திரஜித் 20 ரன்களும், சூர்யபிரகாஷ் 19 ரன்களும் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் கேப்டன் கவுசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெகதீசன் முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராதா கிருஷ்ணனும் (0) ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக கவுசிக் காந்தியுடன் சாய் கிஷோர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் கவுசிக் காந்தி நிதானமாக ஆடி ரன் சேர்த்தநிலையில், மறுமுனையில் சாய் கிஷோர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தநிலையில் சாய் கிஷோர் 43 (27) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய சசிதேவ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கவுசிக் காந்தி 40 (46) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ராஜகோபால் சதீஷ் மற்றும் ஹரிஷ் குமார் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

முடிவில் சிறப்பாக ஆடிய ராஜகோபால் சதீஷ் 31 (19) ரன்களும், ஹரிஷ் குமார் 13 (12) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சேப்பாக் அணி 19.2 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியின் சார்பில் அதிகபட்சமாக கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளும், அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதன்மூலம் நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிசுற்றில் நுழைந்தது.


Next Story