டி.என்.பி.எல். கிரிக்கெட்: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி
x

Image Courtacy: TNPLTwitter

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றிபெற்றது.

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற, திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த நிலையில் திருச்சி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அமித் சாத்விக் மற்றும் முரளி விஜய் இருவரும் முறையே 26 ரன்கள் மற்றும் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் குறைந்த ரன்களிலேயே அவுட்டாகினர். இறுதியாக சரவண குமார் 17 ரன்கள் மற்றும் மதி வண்ணன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய கேப்டன் அனிருதா 9 ரன்களும், சித்தார்த் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய சுப்ரமணியன் ஆனந்த் மற்றும் மான் பாஃப்னா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். இந்த ஜோடியில் ஆனந்த் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பாஃப்னா 26 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் குமார் 2 ரன்களும், ராஜ்குமார் 1 ரன்களிலும் வெளியேறினர்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த துஷார் ரகேஜா, முகமது ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இறுதியில் ரகேஜா 42 (26) ரன்களும், முகமது 29 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் 18.5 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது திருப்பூர் அணி. திருச்சி அணியின் சார்பில் அதிகபட்சமாக சரவணக்குமார் 3 விக்கெட்டுகளும், மதிவாணன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதன்மூலம் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றிபெற்றது.


Next Story