டி.என்.பி.எல் : 32 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி


டி.என்.பி.எல் : 32 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி
x

சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி பெற்றது.

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட போட்டிகள் தற்போது கோவையில் நடந்து வருகிறது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் - சேலம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கேப்டன் ஸ்ரீகாந்த் 32 ரன்களிலும், அரவிந்த் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய சுப்ரமணியன் ஆனந்த் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் மான் பாஃப்னா களமிறங்கினார். சிறந்த பாட்னர்ஷிப்பை அமைக்க தவறிய திருப்பூர் அணி தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பெரியசாமி பந்துவீச்சில் கார்திகேயனிடம் கேட்ச் கொடுத்து ராஜ்குமார் (11) ரன்னில் ஆட்டமிழந்தார். மான் பாஃப்னா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. டேரில் ஃபெராரியோ 2 விக்கெட்களையும் கார்த்திகேயன், பெரியசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணியின் சார்பில் கோபிநாத் மற்றும் கவின் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கோபிநாத் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கவின் 14 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கணேஷ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஜாபர் ஜமால் 3 ரன்னும், பெராரியோ 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் முருகன் அஸ்வின் 9 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனிடையே மறுமுனையில் அதிரடியாக ரன்குவித்து வந்த ரவி கார்த்திகேயன் 36 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிஷோர் மற்றும் பெரியசாமி ஆகியோர் அடுத்தடுத்து போல்ட் ஆகி வெளியேறினர்.

கடைசிஒவரில் அபிஷேக் 5 ரன்களில் ஆட்டமிழக்க கணேஷ் மூர்த்தி ரன் எதுவும் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் சேலம் அணி 19.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. திருப்பூர் அணியின் சார்பில் மோகன் பிரசாத் 3 விக்கெட்டுகளும் அரவிந்த், முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மணிகண்டன் மற்றும் கிரிஸ்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி பெற்றது.


Next Story