தாயாருக்கு உடல்நலக்குறைவு: 3-வது டெஸ்டில் இருந்து கம்மின்ஸ் விலகல்


தாயாருக்கு உடல்நலக்குறைவு: 3-வது டெஸ்டில் இருந்து கம்மின்ஸ் விலகல்
x
தினத்தந்தி 25 Feb 2023 3:34 AM IST (Updated: 25 Feb 2023 3:53 AM IST)
t-max-icont-min-icon

தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

சிட்னி,

தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.

டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 3-வது நாளிலேயே ஆஸ்திரேலியா சுருண்ட நிலையில் அன்றைய தினம் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அவசரமாக தாயகம் புறப்பட்டு சென்றார். சிட்னியில் அவரது நெருங்கிய உறவினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், 3-வது டெஸ்டுக்குள் இந்தியா வந்து விடுவார் என்றும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து கம்மின்ஸ் நேற்று விலகினார். கம்மின்சின் தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரை அருகில் இருந்து கவனிக்க முடிவு செய்துள்ளார். 'எனது தாயார் உடல்நலம் குன்றி வாழ்வின் இறுதிகட்ட சிகிச்சையில் இருப்பதால் இந்த முறை இந்தியாவுக்கு திரும்புவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போது எனது குடும்பத்தினருடன் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன். எனது நிலைமையை புரிந்து கொண்டு ஆதரவளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்' என்று கம்மின்ஸ் குறிப்பிட்டார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தொடங்குகிறது. கம்மின்ஸ் விலகியதால் துணை கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார். கம்மின்சுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே, டிசம்பர் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்து தாக்கி வலதுகை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் ஆடாத ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் உடல்தகுதியை எட்டி இருக்கிறார். நேற்று சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபட்ட கேமரூன் கிரீன் கூறுகையில் ' 2-வது டெஸ்ட் போட்டிக்கே நான் விளையாடும் அளவுக்கு உடல்தகுதியை நெருங்கினேன். ஆனால் மேலும் ஒரு வாரம் கூடுதலாக எடுத்துக் கொண்டதால் அது முழுமையாக குணமடைய உதவிகரமாக இருந்தது. இப்போது நான் 100 சதவீதம் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.

கேமருன் கிரீன் பேட்டிங் மட்டுமின்றி வேகப்பந்தும் வீசக்கூடியவர். அவரது வருகை அணியின் சரியான கலவைக்கு வழிவகுக்கும் என்பதால் ஆஸ்திரேலிய நிர்வாகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.


Next Story