3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு - இந்தியா 19 டெஸ்டுகளில் விளையாடுகிறது


3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு - இந்தியா 19 டெஸ்டுகளில் விளையாடுகிறது
x

image courtesy: ICC via ANI

தினத்தந்தி 15 Jun 2023 1:56 AM IST (Updated: 15 Jun 2023 1:56 AM IST)
t-max-icont-min-icon

3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. இந்திய அணி 19 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

துபாய்,

சமீபத்தில் முடிந்த 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து முதல்முறையாக மகுடம் சூடியது.

இந்த நிலையில் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). நேற்று வெளியிட்டது. 2023 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான டெஸ்ட் தொடர் இதற்கான காலக்கட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் 3 தொடர், வெளிநாட்டில் 3 தொடர் என்ற அடிப்படையில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. மொத்தம் 27 தொடர்களில் 68 டெஸ்டுகள் இதில் அடக்கம்.

முந்தைய சீசன் போலவே வெற்றிக்கு 12 புள்ளியும், 'டிரா'வுக்கு 4 புள்ளியும் வழங்கப்படும். அனைத்து போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதி ஆட்டம் 2025-ம் ஆண்டில் லண்டன் லார்ட்சில் நடைபெறும்.

இந்திய அணி உள்ளூரில் நியூசிலாந்து (3 டெஸ்ட்), இங்கிலாந்து(5), வங்காளதேசம் (2), வெளிநாட்டில் ஆஸ்திரேலியா (5), வெஸ்ட் இண்டீஸ் (2), தென்ஆப்பிரிக்கா (2) ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது. அதாவது நமது அணி இந்த சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 19 டெஸ்டுகளில் விளையாடுகிறது. தொடர்ந்து 3-வது சீசனாக இந்த முறையும் இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன் போட்டிகள் இல்லை. அடுத்த மாதம் 12-ந் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் இருந்து இந்தியாவுக்குரிய சவால் தொடங்குகிறது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு, அன்னிய மண்ணில் இங்கிலாந்து (5 டெஸ்ட்), நியூசிலாந்து (2), இலங்கை( 2), சொந்த மண்ணில் இந்தியா (5), பாகிஸ்தான் (3),வெஸ்ட் இண்டீஸ் (2) ஆகிய அணிகளுடன் மோதும் வகையில் அட்டவணை அமைந்துள்ளது.

உள்நாட்டில் இங்கிலாந்து (3), வெஸ்ட் இண்டீஸ் (2), வங்காளதேசம் (2) அணிகளை சந்திக்கும் பாகிஸ்தான் அணி வெளிநாட்டில் ஆஸ்திரேலியா (3), தென்ஆப்பிரிக்கா (2), இலங்கை (2) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் பர்மிங்காமில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் இருந்து 3-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பிக்கிறது.


Next Story