உள்ளூரில் வெற்றிக்கணக்கை தொடங்குமா சென்னை அணி? - கேரளா பிளாஸ்டர்சுடன் இன்று மோதல்


உள்ளூரில் வெற்றிக்கணக்கை தொடங்குமா சென்னை அணி? - கேரளா பிளாஸ்டர்சுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:00 PM GMT (Updated: 28 Nov 2018 8:10 PM GMT)

சென்னை மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி இந்த முறை தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, 6 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் 9-வது இடம் வகிக்கிறது. இனி ஒவ்வொரு ஆட்டங்களும் சென்னை அணிக்கு முக்கியமானதாகும்.

இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி, கேரளா பிளாஸ்டர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் உள்ளூரில் வெற்றிக்கணக்கை சென்னை அணி தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ரபெல் அகஸ்டா, ஜெஜெ லால்பெகுலா, இனிகோ கால்ட்ரோன், மெயில்சன் ஆல்வ்ஸ், லால்ரின்ஜூவாலா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடினால், வெற்றிக்கனியை பறிப்பதில் கடினம் இருக்காது.கேரளா பிளாஸ்டர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதோடு சரி. அதன் பிறகு அடுத்த 7 ஆட்டங்களில் (4 டிரா, 3 தோல்வி) வெற்றி பக்கமே செல்லவில்லை. அதனால் அந்த அணியும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 10 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 4-ல் சென்னையும், 2-ல் கேரளாவும் வெற்றி கண்டன. 4 ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதற்கிடையே கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த அட்லெடிகோ டி கொல்கத்தா- எப்.சி.கோவா இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.


Next Story