காஷ்மீர் மண்ணிலிருந்து ஒரு கால்பந்து நட்சத்திரம்


காஷ்மீர் மண்ணிலிருந்து ஒரு கால்பந்து நட்சத்திரம்
x
தினத்தந்தி 12 Jan 2019 2:54 PM GMT (Updated: 12 Jan 2019 2:54 PM GMT)

காஷ்மீர் மண்ணிலிருந்து நல்ல செய்திகள் வருவது அரிதான விஷயம். ஆனால் அங்கு ஒரு கால்பந்து நட்சத்திரமாக வளர்ந்துவரும் அப்ஷான் ஆஷிக், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் ஓர் உந்துதலாக உருவாகியிருக்கிறார்.

இந்திய பெண்கள் கால்பந்தில் ஒரு புதிய புரட்சிக்கு விதை போட்டிருக்கும் அப்ஷானின் கதை, ஓர் இந்தி திரைப்படமாக உருவாவது கூடுதல் சுவாரசியம்.

விளையாட்டாக கால்பந்து

சிறுவயதில் பையன்களுடன் பாலின வேறுபாடு இல்லாமல் விளையாடும் பெண்கள், காலப்போக்கில் படிப்பு, வேலை, திரு மணம் என்று ஒதுங்கிவிடுவார்கள்.

அப்ஷானும் ஏறக்குறைய அப்படித்தான். இந்த ஸ்ரீநகர் பெண், தான் வசிக்கும் தெருப் பையன்களுடன் விளையாட்டாகவே கால்பந்து விளையாடி வந்தார். அதில் தீவிரம் காட்டியதில்லை. ஒருமுறை அவரது கல்லூரி பயிற்சியாளர், ‘கால்பந்தில் கவனம் செலுத்து’ என்று கூறியபோதுதான் இதில் முனைப்பாக ஈடுபடும் ஆர்வம் அப்ஷானுக்கு வந்திருக்கிறது.

எதிர்ப்புகளைத் தாண்டி...

ஆனால், பெண்களின் இயல்பு வாழ்க்கையே சிரமமானது என்ற காஷ்மீர் சமூகச் சூழலில், அப்ஷான் அவ்வளவு எளிதாக கால்பந்து களம் காண முடியவில்லை. முதல் எதிர்ப்பு இவரது பெற்றோரிடம் இருந்தே வந்தது.

‘‘கால்பந்து என்பது உடல்ரீதியாக மோதிக்கொள்ளும் விளையாட்டு. கொஞ்சம் முரட்டுத்தனமானது. பெண்களுக்கு இந்த விளையாட்டு சரியாக வராது. நீ வேண்டுமானால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்து’’ என்றனர்.

அப்ஷானுக்கு தங்கள் ஏரியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உண்டு என்றாலும், அவர் மனம் கால்பந்தின் மீதே மையம் கொண்டு நின்றது.

அவர் பெற்றோரின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கால்பந்து மைதானத்துக்கு பயிற்சிக்குச் சென்றுவிடுவார். அப்ஷானின் இந்த அன்றாட நடவடிக்கையை அவரது அக்கம்பக்கத்தினரும், பாதுகாப்புப் படையினரும் கூட ரசிக்கவில்லை.

மும்பை அழைப்பு

இந்நிலையில் ஒரு புதிய வெளிச்சமாக, கடந்த ஆண்டு ஜூனில் மும்பையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அப்ஷானுக்கு வந்தது.

போனில் பேசிய மும்பையைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஷபீர் ஷேக், அந்நகரில் அமைந்துள்ள ‘புட்பால் லீடர் அகாடமி’ என்ற கால்பந்து அகாடமிக்கான தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பமா என்று அப்ஷானை கேட்டார்.

உடனே அப்ஷான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஆனால் ஏற்கனவே அவர் கால்பந்து விளையாடுவதில் விருப்பமில்லாமல் இருந்த பெற்றோர், ‘மும்பை சென்று கால்பந்து விளையாடுவதா? அதுவும் தனியாகச் செல்வதா? முடியவே முடியாது’ என்று அடியோடு மறுத்துவிட்டனர்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, மும்பை செல்லும் முடிவுக்கு வந்துவிட்டார், அப்ஷான். ஒருநாள் பெற்றோருக்குத் தெரியாமல் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு மும்பைக்கு விமானத்தில் பறந்துவிட்டார்.

‘‘இது ரிஸ்க்தான். ஆனால் நாம் கால்பந்தில் ஜொலிக்க இந்த ரிஸ்க்கை எடுக்கத்தான் வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்’’ என்று புன்னகைக் கிறார், அப்ஷான்.

மாநில அணி கேப்டன்

இவர் எடுத்த ‘ரிஸ்க்’ பலன் கொடுக்கவே செய்தது. மும்பையில் கால்பந்தில் மேலும் தன்னைப் பட்டை தீட்டிக்கொண்ட அப்ஷான், இன்று அந்நகரம் சார்ந்த பிரீமியர் இந்தியா கால்பந்து அகாடமி அணி வீராங்கனை. ஜம்மு-காஷ்மீர் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனும் இவரே.

23 வயதாகும் அப்ஷான், கால்பந்துக்காக தற்போது பெரும்பாலும் மும்பையில் நேரத்தைக் கழிக்கிறார்.

தினமும் அதிகாலையில் எழுந்து ஓட்டம், மெல்லோட்டம் என்று உடற் பயிற்சியில் ஈடுபடுகிறார், பின்னர் கால்பந்து பயிற்சி. சமையல், துணி துவைப்பது என்று சொந்த வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். இதற்கிடையில், மும்பை குடிசைப் பகுதிக் குழந்தைகளுக்கு கால்பந்து கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்.

அடித்தளம் அமைத்த பெண்

காஷ்மீரில் பெண்கள் கால்பந்துக்கு வளர்ச்சிக்கே அடித்தளமிட்டவர் என்று அப்ஷானைக் கூறலாம்.

‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் கால்பந்து வீராங்கனை நான். அதனாலேயே நான் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டேன். ஆரம்பத்தில் நான் பையன்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடியபோது பலரும் என்னைக் கிண்டல் செய்தனர். கொஞ்சமும் கூச்சமில்லாமல் பசங்களுடன் போய் விளையாடுறியே, உனக்கென்ன பைத்தியமா என்று கேட்டவர்களும் உண்டு. ஆனால் கால்பந்தில் நான் ஏதாவது சாதித்தால் அதே ஆட்கள் என்னைப் பாராட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும்’’ என்கிறார், அப்ஷான்.

வீட்டில் இரவு 11 மணிக்கு மேல் டி.வி. பார்க்க அனுமதியில்லை என்பதால் எல்லோரும் உறங்கியபிறகு, ரகசியமாக டி.வி.யில் கால்பந்து போட்டிகளை பார்த்திருக்கிறார்.

தேசிய கவனம்

தான் விளையாடுவதோடு, தங்கள் மாநிலத்தில் இருந்து மேலும் பல வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்று பயிற்சியாளர் அவதாரமும் எடுத்தார் அப்ஷான்.

ஆனால் இவர் தேசிய அளவில் கவனம் பெற்றது, ஒருமுறை காஷ்மீர் போலீசார் மீது கல்லெறிந்தபோது. அது அந்த நேரக் கோபத்தில் செய்த செயல் என்றும், தனது சக வீராங்கனைகளிடம் போலீசார் எல்லைமீறி நடந்ததால் தனக்கு அப்போது ஆத்திரம் பீறிட்டுவிட்டது என்றும் கூறுகிறார்.

ஆனால் அந்தச் சம்பவத்தின் நல்ல விளைவாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார், அப்ஷான். அந்தச் சந்தர்ப்பத்தை தங்கள் மாநிலத்தில் கால்பந்தை மேம்படுத்தக் கிடைத்த வாய்ப்பாக அவர் பயன்படுத்திக்கொண்டார்.

அப்ஷான் தெரிவித்த குறைகளை கேட்டுக்கொண்ட ராஜ்நாத் சிங், உடனடியாக அப்போதைய முதல்-மந்திரி மெகபூபா முப்தியை தொடர்புகொண்டு, மகளிர் கால்பந்துக்குக்கு தேவையான விஷயங்களை செய்துகொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் விளைவாக விறுவிறுவென்று பல வேலைகள் நடந்தன. காஷ்மீரில் கால்பந்துக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட, மேலும் பல பெண்கள் இவ்விளையாட்டு நோக்கி வரத் தொடங்கியிருக்கின்றனர்.

அப்ஷானின் உறுதி

‘‘கால்பந்து மூலம் எங்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நான் அழுத்தமாக நம்புகிறேன்’’ என்று கூறும் அப்ஷான் ஆஷிக், இந்தியப் பெண்கள் கால்பந்து அணியில் ஆடுவதுதான் தனது லட்சியம் என் கிறார் உறுதிபட.

பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி அப்ஷானாக நடிக்க, இவரது கதை ‘ஹோப் சோலோ’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இப்படம், மேலும் பல அப்ஷான்களை உருவாக்கும் என்று நம்பலாம்.

Next Story