லா லிகா கோப்பையை வென்றது பார்சிலோனா - மெஸ்சி சாதனை


லா லிகா கோப்பையை வென்றது பார்சிலோனா - மெஸ்சி சாதனை
x
தினத்தந்தி 28 April 2019 10:59 PM GMT (Updated: 28 April 2019 10:59 PM GMT)

லா லிகா கோப்பையை வென்றது பார்சிலோனா அணி. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி சாதனை படைத்தார்.

பார்சிலோனா,

லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் வழக்கம் போல் 20 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 62-வது நிமிடத்தில் அடித்தார். இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பார்சிலோனா அணி பட்டத்தை உறுதி செய்தது. பார்சிலோனா அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 25 வெற்றி, 8 டிரா, 2 தோல்வி என்று 83 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அட்லெடிகோ மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மாட்ரிட் அணி 65 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

லா லிகா பட்டத்தை பார்சிலோனா அணி வெல்வது இது 26-வது முறையாகும். இவற்றில் பார்சிலோனா கோப்பையை வென்ற 10 தொடரில் மெஸ்சி அங்கம் வகித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனாவுக்காக அதிக முறை லா லிகா கோப்பையை வென்றுத் தந்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.


Next Story