கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது கொலம்பியா + "||" + Copa America Football: Colombia was a shock to Argentina

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது கொலம்பியா

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது கொலம்பியா
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

சால்வடோர்,

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க கண்டத்து 10 அணிகளோடு ஆசியாவைச் சேர்ந்த ஜப்பான், கத்தார் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.


இதில் நேற்று முன்தினம் இரவு சால்வடோரில் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 14 முறை சாம்பியனான லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, கொலம்பியாவை சந்தித்தது. பந்தை கட்டுப்படுத்துவதிலும், இலக்கை நோக்கி ஷாட்டுகள் (6 முறை) அடிப்பதிலும் அர்ஜென்டினாவின் கை ஓங்கினாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. கொலம்பியாவின் தடுப்பு அரணை, லயோனல் மெஸ்சி- செர்ஜியோ அகுரோ கூட்டணியால் உடைக்க முடியவில்லை. 66-வது நிமிடத்தில் வலைக்கு அருகில் நின்ற மெஸ்சிக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. கோல் கீப்பரிடம் இருந்து திரும்பி வந்த பந்தை துரிதமாக தலையால் முட்டிய போது, அது கம்பத்திற்கு வெளியே சென்று விட்டது.

அதே சமயம் கடைசி கட்டத்தில் கொலம்பியா வீரர்களின் தாக்குதலில் அர்ஜென்டினா நிலைகுலைந்தது. 72-வது நிமிடத்தில் ரோஜர் மார்ட்டினஸ் சற்று தூரத்தில் இருந்து பந்தை உதைத்து வலைக்குள் அனுப்பினார்.

86-வது நிமிடத்தில் அந்த அணியின் மாற்று ஆட்டக்காரர் துவன் ஜபட்டா கோல் போட்டார். முடிவில் கொலம்பியா 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. கொலம்பியா அணி 2007-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அர்ஜென்டினாவை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா வீரர் மெஸ்சி கூறுகையில், ‘நாங்கள் சிறப்பாக விளையாடிய போதிலும் எதிரணி கோல் அடித்தது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆனாலும் இந்த ஆட்டத்தில் இருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக் கொண்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த முயற்சிப்போம். அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது’ என்றார். அர்ஜென்டினா தனது அடுத்த ஆட்டத்தில் பராகுவேயை 19-ந்தேதி எதிர்கொள்கிறது.

‘ஏ’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வெனிசுலா-பெரு அணிகள் மோதின. இதில் பெரு வீரர்கள் கிறிஸ்டோபர் கோன்சலேஸ், ஜெபர்சன் பர்பான் ஆகியோர் கோல் அடித்த போதிலும் அது ‘ஆப்-சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் நொந்து போனார்கள்.

75-வது நிமிடத்தில் வெனிசுலா வீரர் லூயிஸ் டெல் பினோ 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் எஞ்சிய நேரம் அந்த அணியினர் 10 வீரர்களுடன் விளையாடி சமாளித்துக் கொண்டனர். இந்த ஆட்டம் கோல் இன்றி டிரா (0-0) ஆனது.