உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் இன்று மோதல்


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 18 Nov 2019 11:56 PM GMT (Updated: 18 Nov 2019 11:56 PM GMT)

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் இன்று இந்தியா-ஓமன் அணிகள் மோதுகின்றன.

மஸ்கட்,

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளும் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 3 ஆட்டத்தில் டிராவும் (கத்தார், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), ஒரு ஆட்டத்தில் தோல்வியும் (ஒமனுக்கு எதிராக 1-2) கண்டு தனது பிரிவில் 3 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது.

இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஓமன் அணி 3 வெற்றியும் (இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு தோல்வியும் (கத்தாருக்கு எதிராக) அடைந்து 9 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. கத்தார் அணி 10 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தானுடன் டிரா செய்தது. ஓமன் அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

தரவரிசையில் 84-வது இடத்தில் இருக்கும் ஓமன் அணி கவுகாத்தியில் செப்டம்பர் மாதத்தில் நடந்த தனது முதல் லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் 106-வது இடத்தில் உள்ள இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா?, சாவா? போட்டியாகும். இதில் இந்திய அணி தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது முடியாத விஷயமாகும். எனவே இந்திய அணி, ஓமனுக்கு அதிர்ச்சி அளிக்க எல்லா வகையிலும் போராடும். அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை தொடர ஓமன் அணி தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியா-ஓமன் அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஓமன் அணி 8 தடவை வென்றுள்ளது. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட வென்றதில்லை. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கருத்து தெரிவிக்கையில், ‘கவுகாத்தியில் எங்களுக்கு எதிராக விளையாடியதை விட ஓமன் அணி தற்போது நல்ல நிலையில் உள்ளது. அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்றார்.


Next Story