கால்பந்து

‘கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்’ - சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் பேட்டி + "||" + We failed to take advantage of the opportunities available - Chennai FC Interview with the coach

‘கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்’ - சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் பேட்டி

‘கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்’ - சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் பேட்டி
ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறியதால் தோல்வி ஏற்பட்டதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவென் கோய்லே கூறியுள்ளார்.
கோவா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. மகுடம் சூடிய கொல்கத்தாவுக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.


தோல்விக்கு பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவென் கோய்லே (ஸ்காட்லாந்து) நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் விளையாடிய விதத்தை வைத்து 1-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் முடிந்தது ஏமாற்றம் அளிக்கிறது. தொடக்கத்திலேயே கோல் அடிக்க எங்களுக்கு சில எளிதான வாய்ப்புகள் கிடைத்தது. அதை கோலாக மாற்ற தவறினோம். பந்தை கிட்டத்தட்ட 70 சதவீதம் எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். முதல் பாதியில் 5 கோல்கள் வரை நாங்கள் அடித்திருக்கலாம். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். வாய்ப்பை சாதகமாக உருவாக்கிக் கொள்ளாவிட்டால், அதற்குரிய விளைவை அனுபவிக்க வேண்டியதுதான்.

வெற்றி பெற்றதற்காக கொல்கத்தா அணியை பாராட்டியாக வேண்டும். ஆனால் அவர்கள் எங்களை விட சிறந்த அணியாக இருந்தனர் என்று மட்டும் என்னிடம் சொல்லி விடாதீர்கள். களத்தில் எங்களது ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆனால் சில கோல்களை எளிதாக விட்டுக்கொடுத்தது பின்னடைவாகிப் போனது. கொல்கத்தா அணியின் கடைசி 2 கோல்களை நாங்கள் தவிர்த்திருக்கலாம். என்னை பொறுத்தவரை இந்த ஆட்டத்தின் நாயகன் யார் என்றால், அது கொல்கத்தா அணியின் கோல் கீப்பர் அரிந்தம் பட்டாச்சார்யா தான். உண்மையிலேயே பிரமாதமாக செயல்பட்டார்.

மொத்தத்தில் இந்த இரவு எங்களுக்குரியதாக அமையவில்லை. எங்களது வீரர்களிடம், ‘அடுத்த சீசனில் இதே மாதிரியான சூழல் இருந்தால் நிச்சயம் கோப்பை உங்களது கையில் இருக்கும்’ என்று கூறினேன்.

சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளராக தொடர்வீர்களா? என்று கேட்கிறீர்கள். சென்னை அணியின் உரிமையாளர்களுக்கு என்னை பிடிக்கும், தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்று நம்புகிறேன். அது குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம். எனவே இப்போது அந்த கேள்விக்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது.

அணியில் உள்ள இளம் வீரர்களை நினைத்து கவலை கொள்கிறேன். அவர்கள் தங்களது முழு முயற்சியை வெளிப்படுத்தினர். அணிக்காக நிறைய பங்களிப்பை அளித்துள்ளனர். தங்கள் கிளப்பை நேசிக்கிறார்கள். ஆனால் கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் அவர்களுக்காக வருந்துகிறேன்.

இவ்வாறு ஓவென் கோய்லே கூறினார்.வெற்றி மகிழ்ச்சியில் பயிற்சியாளர் அன்டோனியா லோப்ஸ் ஹபாசை தூக்கிப்போட்டு கொண்டாடும் கொல்கத்தா அணி வீரர்கள்.


கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் அன்டோனியா லோப்ஸ் ஹபாஸ் அளித்த பேட்டியில், ‘முதல்பாதியில் சில நிமிடங்களுக்கு பிறகு சென்னையை விட நாங்கள் சிறப்பாக ஆடினோம். 2-வது பாதியை எடுத்துக் கொண்டால், எங்கள் கேப்டன் ராய் கிருஷ்ணா காயமடைந்ததால் பதற்றத்திற்கு உள்ளானோம். பிற்பாதியில் எங்களது ஆட்டம் நன்றாக இல்லை. என்றாலும் கடைசியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று விட்டோம். எங்களது பிரதான பலமே, கூட்டு முயற்சிதான்.

ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை போல், நானும் கொல்கத்தா அணி மீது அன்பு வைத்துள்ளேன். அதனால் தான் அந்த அணி நிர்வாகம் என்னை ஜூன் மாதம் அழைத்த போது உடனே இணைய ஒத்துக் கொண்டேன். முதல் சீசனில் இருந்தே கொல்கத்தா அணி என்றாலே எனக்கு ‘ஸ்பெஷல்’ தான். அது இப்போதும் தொடருகிறது. நாங்கள் ஒரு குடும்பம் போல் பழகுகிறோம். எங்களது வெற்றியின் ரகசியம் இது தான்’ என்றார்.