பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தமிழக கால்பந்து வீராங்கனை: மத்திய மந்திரி பாராட்டு


பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தமிழக கால்பந்து வீராங்கனை: மத்திய மந்திரி பாராட்டு
x
தினத்தந்தி 27 May 2020 7:05 AM GMT (Updated: 27 May 2020 7:05 AM GMT)

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தமிழக கால்பந்து வீராங்கனை குறித்த புகைப்படம் சமூக வ்லைதளத்தில் வெளியானது அதைபார்த்த மத்திய விளையாட்டுத் துறை மந்திரி பாராட்டு தெரிவித்தார்.

கடலூர்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கால்பந்து வீராங்கனை இந்துமதிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

2014 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் 25 வயது இந்துமதி கதிரேசன் இதுவரை 34 போட்டிகளில் பங்குபெற்று  12 கோல்களை அடித்துள்ளார். 2018-ல் ஒடிசாவில் நடைபெற்ற சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்துமதி தலைமையில் தமிழக அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

10 கோல்கள் அடித்து இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாகவும் இந்துமதி தேர்வானார்.சர்வதேசக் கால்பந்து வீராங்கனையான இந்துமதி, சென்னை மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னை அண்ணா நகரில் கொரோனா தடுப்புப் பாதுகாப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 

முகக்கவசம் அணிந்து அவர் பணியாற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன

இது குறித்து இந்துமதி கதிரேசன் கூறியதாவது:

இது அனைவருக்கும் கடினமான நேரம். பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதே என் பணி. பாதுகாப்புப் பணியைத் தாண்டி என்னால் வேறு வேலைகளைச் செய்ய முடியவில்லை. குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியவில்லை.

சிலசமயம் இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டிய நிலைமையும் வரும். கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது மூலம் இக்கட்டான சமயத்தில் நாட்டின் நன்மைக்காக உழைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

சமூகவலைத்தளங்களின் வெளியான இந்துமதியின் புகைப்படங்களைக் பார்த்து மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, டுவிட்டரில் தெரிவித்ததாவது:-

இந்திய அணிக்காக விளையாடும் இந்துமதி, கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதைக் கண்டு பெருமிதம் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story