ஜெர்மனியை பதம் பார்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து


ஜெர்மனியை பதம் பார்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
x
தினத்தந்தி 30 Jun 2021 2:51 AM GMT (Updated: 30 Jun 2021 2:51 AM GMT)

இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.

லண்டன்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் லண்டனில் நேற்று நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. பரமஎதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி நின்றனர். கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு நழுவ விடுவதுமாக ஆட்டத்தின் முதல்பகுதி சென்றது.

பிற்பாதியில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர், ஜெர்மனியின் தடுப்பு கோட்டையை தகர்த்தனர். 75-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங் கோலுக்குள் தள்ளிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார். ஜெர்மனி வீரர்கள் சுதாரித்து மீள்வதற்குள் 86-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்து எதிரணியை முற்றிலும் நிலைகுலைய வைத்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. நாக்-அவுட் சுற்றில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வீழ்த்துவது 1966-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.

Next Story