கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி


கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 8 July 2021 1:49 AM GMT (Updated: 8 July 2021 1:49 AM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

2-வது அரைஇறுதி
47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பிரேசிலியாவில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, முன்னாள் சாம்பியன் கொலம்பியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் நீயா, நானா என்று கடுமையாக வரிந்து கட்டியதால் ஆரம்பம் முதலே ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. 7-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி கோல் அடித்தது. அந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் மார்ட்டினஸ் கோல் வலைக்குள் திணித்தார்.

சமநிலை
கோல் வாங்கியதும் பதில் கோல் திருப்ப கொலம்பியா அணியினர் துடிப்புடனும், ஆக்ரோஷமாகவும் செயல்பட்டனர். அந்த அணி வீரர்கள் வில்மர் பாரிஸ் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டும், கார்னர் வாய்ப்பில் யெர்ரி மினா தலையால் முட்டிய பந்து கம்பத்துக்கு மேல் வாக்கில் சென்றும் வீணானது. முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.பிற்பாதியிலும் கொலம்பியா அணியினர் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்தினர். இதன் பலனாக 61-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் லூயிஸ் டியாஸ் பதில் கோல் திருப்பினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி கைகூடவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் அதிகமாக (மொத்தம் 47 முறை) பவுல் செய்தனர். இதன் எதிரொலியாக 4 அர்ஜென்டினா வீரர்களும், 6 கொலம்பியா வீரர்களும் நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

அர்ஜென்டினா வெற்றி
இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் அபாரமாக செயல்பட்டு கதாநாயகனாக ஜொலித்தார். கொலம்பியா வீரர்கள் 2-வது, 3-வது மற்றும் கடைசி வாய்ப்பில் அடித்த ஷாட்களை அவர் அருமையாக தடுத்து அமர்க்களப்படுத்தியதுடன், அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அர்ஜென்டினா தனது கடைசி 19 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்ைல என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் ரியோடிஜெனீரோவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரேசிலுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நாளை நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட பெரு-கொலம்பியா அணிகள் சந்திக்கின்றன.

Next Story