பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது : இறுதி பட்டியலில் மெஸ்ஸி , எம்பாப்பே , பென்சிமா..!


பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது : இறுதி பட்டியலில் மெஸ்ஸி , எம்பாப்பே , பென்சிமா..!
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 11 Feb 2023 11:29 AM GMT (Updated: 11 Feb 2023 11:32 AM GMT)

பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்ட்டுள்ளனர்.


சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்ட்டுள்ளனர்.

கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவரான பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே தங்க ஷூவை தட்டிச் சென்றார். அவர் மொத்தம் 8 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்தார்.

அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன் , ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை மெஸ்சி தட்டிச் சென்றார்.

காயம் காரணமாக உலகக் கோப்பையை தவறவிட்ட பிரான்ஸ் வீரர் பென்சிமா , கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு சிறப்பாக விளையாடியதற்காக கடந்த ஆண்டு பலோன் டி'ஓர் விருதை வென்றார்,

வெற்றியாளர்கள் பிப்ரவரி 27 அன்று பாரிஸில் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .



Next Story