தெற்காசிய கால்பந்து போட்டி: லெபனான், மாலத்தீவு அணிகள் வெற்றி


தெற்காசிய கால்பந்து போட்டி: லெபனான், மாலத்தீவு அணிகள் வெற்றி
x

image courtesy: AIFF Media via ANI

தெற்காசிய கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் லெபனான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் 2-வது நாளான நேற்று மாலை நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 192-வது இடத்தில் இருக்கும் அணியான வங்காளதேசம், 99-வது இடத்தில் உள்ள லெபனான் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லெபனான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 67 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த அந்த அணியால் முதல் பாதியில் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

80-வது நிமிடத்தில் லெபனான் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் ஹஸ்சன் மாடோக் இந்த கோலை அடித்தார். கடைசி நிமிடத்தில் (இஞ்சுரி டைம்) லெபனான் அணி வீரர் காலில் பாடெர் கோல் அடித்தார். வங்காளதேச அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் லெபனான் 2-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

இரவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான மாலத்தீவு அணி 2-0 என்ற கோல் கணக்கில் பூடானை துவம்சம் செய்தது. மாலத்தீவு அணியில் ஹம்சா அகமது பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 6-வது நிமிடத்திலும், நைஸ் ஹசன் 90-வது நிமிடத்திலும் கோலடித்தனர். முரட்டு ஆட்டம் காரணமாக மாலத்தீவு வீரர் ஹசன் ராப் அகமது கடைசி நிமிடத்தில் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்-குவைத் (மாலை 3.30 மணி), இந்தியா-நேபாளம் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story