பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணி அபார வெற்றி...!


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணி அபார வெற்றி...!
x

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது.

வெலிங்டன்,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

2-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மெல்போர்னில் நடந்த ஆட்டத்தில் (பி பிரிவு) ஒலிம்பிக் சாம்பியன் கனடா அணி, நைஜீரியாவை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பந்தை அதிக நேரம் (55 சதவீதம்) கட்டுப்பாட்டில் வைத்து இருந்த கனடா வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிட்டியது. 50-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டின் சின்கிளைர் கோல் வலையை நோக்கி அடித்த பந்தை நைஜீரியா அணியின் கோல்கீப்பர் சிமாகா நடோசி பாய்ந்து விழுந்து ஒற்றைக்கையால் தடுத்து நிறுத்தி தனது அணியை காப்பாற்றினார். இந்த அரிய வாய்ப்பை கோட்டை விட்ட 40 வயதான சின்கிளைர் சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் (190) அடித்தவர் என்ற சாதனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி எடுத்தும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி (0-0) டிராவில் முடிந்தது.

டுனெடினில் நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான பிலிப்பைன்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. சுவிட்சர்லாந்து தரப்பில் ரமோனா பாச்மேன் 'பெனால்டி' வாய்ப்பில் 45-வது நிமிடத்திலும், செரினா பிபெல் 64-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

வெலிங்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (சி பிரிவு) ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை பந்தாடியது. இதில் பந்தை 81 சதவீதம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து முழுமையாக கோலோச்சிய ஸ்பெயின் அணியினர், இலக்கை நோக்கி அதிகமான ஷாட்டுகளை அடித்தனர். முதல் 27 நிமிடங்களுக்குள் 3 கோல்கள் போட்டு வலுவான முன்னிலை பெற்ற ஸ்பெயின் அதனை கடைசி வரை தக்கவைத்து கொண்டது.

34-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா அடித்த பந்தை கோஸ்டாரிகா கோல் கீப்பர் டேனிலா சோலெரா தடுத்து விட்டார். இல்லாவிட்டால் அந்த அணியின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இன்றைய ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா-வியட்நாம், ஜாம்பியா-ஜப்பான், இங்கிலாந்து-ஹைதீ, டென்மார்க்-சீனா அணிகள் மோதுகின்றன.


Next Story