உலககோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் அணிக்கு இத்தனை கோடியா..? - வியக்க வைக்கும் பரிசுத்தொகை


உலககோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் அணிக்கு  இத்தனை கோடியா..? -  வியக்க வைக்கும் பரிசுத்தொகை
x
தினத்தந்தி 16 Nov 2022 5:49 AM GMT (Updated: 16 Nov 2022 8:08 AM GMT)

உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா

தோகா,

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) சந்திக்கின்றன.கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை விவரம் வெளியாகி உள்ளது. மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும்.

இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும். 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்துக்கு ரூ.244 கோடி வழங்கப்படும். 3-வது இடத்துக்கு ரூ.219 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.203 கோடியும் கிடைக்கும். கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.


Next Story