ஹாக்கி

இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் நீக்கம் + "||" + Coach of Indian team The Oldman's removal

இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் நீக்கம்

இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் நீக்கம்
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஓல்ட்மான்ஸ் நீக்கம்

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் உயர் செயல்திறன் இயக்குனராக நெதர்லாந்தை சேர்ந்த ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் 2013–ம் ஆண்டில் ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். தலைமை பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்தை சேர்ந்த பால் வான் ஆஸ் தனது பதவியில் இருந்து விலகியதை அடுத்து 2015–ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். அது முதல் அவர் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் பயிற்சியாளராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓல்ட்மான்ஸ்சை நீக்கம் செய்வது என்று ஆக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. பொருத்தமான புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்படும் வரை உயர் செயல்திறன் இயக்குனர் டேவிட் ஜான் பயிற்சியாளர் பொறுப்பையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குழு தலைவர் விளக்கம்

இந்திய ஆக்கி அணி தேர்வு குழு தலைவர் ஹர்பிந்தர்சிங் தலைமையில் டெல்லியில் நடந்த ஆக்கி இந்தியா உயர் செயல்திறன் மற்றும் மேம்பாட்டு கமிட்டியின் 3 நாள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய ஆக்கி அணி வீரர்கள் சர்தார்சிங், ஸ்ரீஜேஷ், மன்பிரீத்சிங் உள்பட 24 உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் இந்திய ஆக்கி அணியின் தேர்வு குழு தலைவர் ஹர்பிந்தர்சிங் அளித்த பேட்டியில், ‘தலைமை பயிற்சியாளரின் பணி அணியை முன்னேற்றம் காண வைப்பதாகும். அணியினரின் ஒட்டுமொத்த உடல் தகுதி, இணக்கமான செயல்பாடு ஆகியவை பாராட்டும் வகையில் முன்னேறி இருக்கிறது. ஆனால் ஆட்ட முடிவுகள் மற்றும் அணியின் செயல்திறன் நிலையானதாகவும், எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் இல்லை. 2016 மற்றும் 2017–ம் ஆண்டுகளில் இந்திய அணியில் செயல்பாடுகள் கமிட்டி உறுப்பினர்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் கனடாவிடம் நமது அணி தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. ஆசிய போட்டியில் வெற்றி பெறுவதை அணியின் வெற்றிகரமான செயல்பாட்டுக்கான அடையாளமாக கருத முடியாது. முக்கியமான சர்வதேச போட்டியில் அணி வெற்றி பெற வேண்டியதை அவசியமாக கருதுகிறோம். இந்த ஆண்டில் ஆசிய கோப்பை மற்றும் உலக ஆக்கி லீக் இறுதிசுற்று போட்டிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டில் உலக கோப்பை போட்டியும், 2020–ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியும் நடைபெற இருக்கிறது. இதனால் இந்திய ஆக்கியின் வருங்கால நலன் கருதி கடினமான முடிவை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது’ என்று தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் நல்ல முடிவு தேவை

இந்திய ஆக்கி அணியின் உயர் செயல்திறன் இயக்குனர் டேவிட் ஜான் கருத்து தெரிவிக்கையில், ‘ஓல்ட்மான்ஸ் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார். ஆனால் நமக்கு குறுகிய காலத்தில் நல்ல முடிவு கிடைக்க வேண்டியது அவசியமானதாகும். எனவே புதிய வழியில் அணியை வழி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 2012–ம் ஆண்டு முதல் நம்மிடம் நிறைய வீரர்கள் இருந்தும் சர்வதேச போட்டியில் விரும்பிய முடிவை பெறுவதில் தோல்வி கண்டே வருகிறோம். நாங்கள் நிலையான செயல்பாட்டை விரும்புகிறோம். சர்வதேச போட்டிகளில் முதல் 3 இடங்களுக்குள் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். ஆசிய கோப்பை, உலக ஆக்கி லீக் இறுதி சுற்று, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி, 2020–ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் நமது அணி பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். ஓல்ட்மான்ஸ் பயிற்சியில் இந்திய அணி தர வரிசையில் 11–வது இடத்தில் இருந்து 6–வது இடத்துக்கு முன்னேறியது. ஆனால் இந்த ஆண்டில் மலேசியாவுக்கு எதிராக 2 முறையும், கனடாவுக்கு எதிராக ஒரு முறையும் நமது அணி தோல்வி கண்டது ஓல்ட்மான்ஸ்க்கு எதிராக அமைந்து விட்டது’ என்றார்.

நீக்கம் கருத்து ஓல்ட்மான்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. வேறு வழியில் பயணிக்க ஆக்கி இந்தியா எடுத்து இருக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்’ என்றார்.