உலக ஆக்கி லீக்: அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தியது


உலக ஆக்கி லீக்: அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தியது
x
தினத்தந்தி 6 Dec 2017 9:00 PM GMT (Updated: 6 Dec 2017 8:25 PM GMT)

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம்,

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த கால்இறுதியில் இந்தியா, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. இதில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்டதால் பரபரப்புக்கு குறைவில்லாமல் நகர்ந்தது. வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இந்திய அணியில் குர்ஜந்த் சிங், ஹர்மன்பிரீத்சிங், ருபிந்தர்பால் சிங் ஆகியோர் கோல் போட்டனர்.

இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட 5 வாய்ப்பில் 2–ஐ மட்டுமே கோலாக்கின. இதிலும் சமநிலை நீடித்ததால் சடன்–டெத் முறை கொண்டு வரப்பட்டது. இதன் முதல் வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத்சிங் கோல் அடித்தார். இதன் பிறகு பெல்ஜியத்தின் ஆர்தர் வான் டோரன் தங்களுக்குரிய வாய்ப்பை கோலாக்க முயற்சித்த போது, இந்திய கோல் கீப்பர் ஆகாஷ் சிக்தே அற்புதமாக தடுத்து அசத்தினார். ஷூட்–அவுட் முடிவில் இந்திய அணி 3–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்ததுடன், அரைஇறுதிக்கும் முன்னேறியது. லீக்கில் சோபிக்க தவறிய இந்தியாவுக்கு இந்த தொடரில் கிடைத்த முதல் வெற்றி இது தான். அதே சமயம் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்த பெல்ஜியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லை.

மற்றொரு கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 4–1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பந்தாடியது. இன்றைய கால்இறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து– அர்ஜென்டினா, ஜெர்மனி–நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.


Next Story