ஹாக்கி

அகில இந்திய ஆக்கி:அரைஇறுதியில் ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி + "||" + All India Hockey: In semi Final Railway-Punjab Sindhu Bank

அகில இந்திய ஆக்கி:அரைஇறுதியில் ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி

அகில இந்திய ஆக்கி:அரைஇறுதியில் ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி
அகில இந்திய ஆக்கி போட்டியின் முதலாவது அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் மோதுகின்றன.
சென்னை, 

அகில இந்திய ஆக்கி போட்டியின் முதலாவது அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் மோதுகின்றன.

ரெயில்வே அணி வெற்றி

92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ரெயில்வே-மத்திய செயலகம் (ஏ பிரிவு) அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியன் ரெயில்வே அணி 3-1 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை தோற்கடித்தது. இந்தியன் ரெயில்வே அணியின் சார்பில் ஹர்சகிப் சிங் 17-வது நிமிடத்திலும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அஜ்மிர் சிங் 40-வது நிமிடத்திலும், பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி கரன்பால் சிங் 44-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மத்திய செயலக அணி தரப்பில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மொஹித்குமார் 37-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

ஆட்டம் ‘டிரா’

மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் சிந்து வங்கி-இந்தியன் ஆயில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பஞ்சாப் சிந்து வங்கி அணியில் ஆஷிஷ் குமார் 12-வது நிமிடத்திலும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ககன்பிரீத் சிங் 61-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்தியன் ஆயில் அணியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அபான் யூசுப் 33-வது நிமிடத்திலும், பாரத் சிகரா 54-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியன் ரெயில்வே அணி (3 வெற்றி, ஒரு தோல்வி) முதலிடம் பிடித்தும், இந்திய ராணுவ அணி (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடம் பிடித்தும் அரைஇறுதிக்கு முன்னேறின. இரு அணிகளும் 9 புள்ளிகள் பிடித்து சமநிலை வகித்தாலும், கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ரெயில்வே அணிக்கு முதலிடம் கிட்டியது. நடப்பு சாம்பியன் ஓ.என்.ஜி.சி. (2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 3-வது இடம் பெற்றும், மத்திய செயலக அணி (ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி) 4-வது இடம் பெற்றும், மும்பை அணி 4 ஆட்டத்திலும் தோல்வி கண்டு கடைசி இடம் பெற்றும் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

நாளை அரைஇறுதி ஆட்டம்

‘பி’ பிரிவில் இந்திய ஆயில் அணியும் (2 வெற்றி, 2 டிரா), பஞ்சாப் சிந்து வங்கி அணியும் (2 வெற்றி, 2 டிரா) தலா 8 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இந்தியன் ஆயில் அணி முதலிடத்தையும், பஞ்சாப் சிந்து வங்கி 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்குள் நுழைந்தன. இந்திய கடற்படை (2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 3-வது இடம் பெற்றும், சென்னை அணி (2 டிரா, 2 தோல்வி) 4-வது இடம் பெற்றும், பெங்களூரு அணி எல்லா ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடம் பெற்றும் அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தன.

போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி அணியும் (மாலை 4 மணி), 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியன் ஆயில்- இந்திய ராணுவம் அணியும் (மாலை 6.15 மணி) மோதுகின்றன.