உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா? - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை


உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி பெறுமா? - பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை
x

உலக கோப்பை ஆக்கி போட்டியில் 2-வது வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி இன்று பெல்ஜியத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

புவனேஸ்வரம்,

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. போட்டியை நடத்தும் இந்திய அணி ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை பந்தாடியது.

இந்த நிலையில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 3-ம் நிலை அணியான பெல்ஜியத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. இதில் தான் இந்தியாவுக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனெனில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான பெல்ஜியம் மிகவும் பலம் வாய்ந்தது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விரு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 5-ல் இந்தியாவும், 13-ல் பெல்ஜியமும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டம் ‘டிரா’ ஆனது.

பெல்ஜியம் தனது முதலாவது லீக்கில் கனடாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 2 வெற்றிகளுடன் நேரடியாக கால்இறுதியை எட்டும் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விடலாம்.

மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரை பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் தடுமாறுகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட இந்திய அணி 5 பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒன்றை மட்டுமே கோலாக்கியது.

இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரசிங் கூறுகையில், ‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நேர்த்தியான பீல்டு கோல்கள், பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் கோல்கள் என்று இரண்டும் கலந்து அடித்தோம். ஆனால் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை நேரடியாக கோலாக்கும் யுக்தியை சரியாக பயன்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும் எப்படி கோல் அடிக்கிறோம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை’ என்றார்.

மேலும் அவர் ‘எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. நெருக்கடியை அனுபவித்து விளையாடினால் தான் சாதிக்க முடியும். இது எங்களுக்கு கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் போன்றது. கால்இறுதிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். கடந்த 5-6 மாதங்களாக இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தில் சிறப்புற்று விளங்குகிறது. அது தான் எங்களது பிரதான பலமும் ஆகும். அதில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம். எங்கள் அணியின் 12-வது வீரர் யார் என்றால் அது ரசிகர்கள் தான். அவர்களின் ஆதரவை சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-கனடா அணிகள் சந்திக்கின்றன.


Next Story