உலக கோப்பை ஆக்கியில் ஜெர்மனி அணி 2–வது வெற்றி 4–1 கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது


உலக கோப்பை ஆக்கியில் ஜெர்மனி அணி 2–வது வெற்றி 4–1 கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது
x
தினத்தந்தி 5 Dec 2018 10:00 PM GMT (Updated: 5 Dec 2018 8:46 PM GMT)

உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி 4–1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2–வது வெற்றியை தனதாக்கியது.

புவனேஸ்வரம்,

உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி 4–1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2–வது வெற்றியை தனதாக்கியது.

உலக கோப்பை ஆக்கி

16 அணிகள் பங்கேற்றுள்ள 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி–நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

13–வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் வாலென்டின் வெர்கா கோல் அடித்தார். அதன் பிறகு ஜெர்மனி அணி பதில் கோல் திருப்ப தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக ஜெர்மனி அணிக்கு 30–வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் மத்தியாஸ் முல்லெர் கோல் போட்டார். நெதர்லாந்து அணி தனக்கு கிடைத்த சில பெனால்டி வாய்ப்புகளை வீணடித்தது. முதல் பாதியில் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

ஜெர்மனி அணி 2–வது வெற்றி

52–வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜெர்மனி அணி வீரர் லூகாஸ் வின்ட்பெடர் கோல் திணித்தார். 54–வது நிமிடத்தில் ஜெர்மனி அணி 3–வது கோலை அடித்தது. அந்த அணியின் மார்கோ மில்ட்காவ் இந்த கோலை அடித்தார். 58–வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கிட்டிய பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் கிறிஸ்டோபர் ருக் கோல் அடித்தார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் தரவரிசையில் 6–வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி 4–1 என்ற கோல் கணக்கில் 4–வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தை வீழ்த்தியது. ஜெர்மனி அணி தொடர்ச்சியாக வென்ற 2–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஜெர்மனி அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கி விட்டது. ஜெர்மனி அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சாய்த்து இருந்தது. நெதர்லாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவை எளிதில் வென்று இருந்தது.

பாகிஸ்தான்–மலேசியா ஆட்டம் ‘டிரா’

மற்றொரு லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியயான பாகிஸ்தான் அணி, மலேசியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 51–வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது அடிக் கோல் அடித்தார். 55–வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மலேசியா அணி வீரர் பைஜல் சாரி பதில் கோல் திருப்பினார். பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு இருந்தது. மலேசியா அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோற்று இருந்தது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஸ்பெயின்–நியூசிலாந்து (மாலை 5 மணி), அர்ஜென்டினா–பிரான்ஸ் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story